பக்கம் எண் :

135
 

தள்ளியும் வாயின் பொய் கூறார் - சோர்ந்தும் தம் வாயினாற் பொய் சொல்லார், சாயின் பரிவது இலர் - வினைவயத்தால் தம் செல்வாக்குக் குறையின், அதற்காக வருந்துவதும் இலராவர்.

(க-து.)சான்றோர்பால் இயல்பாகவே தீய குணங்கள் இல்லை.

(வி-ம்.)ஓரீஇ என்னும் எச்சத்தை ஓரீஇ நிற்பர் என ஒரு தனிக் கருத்தாகக் கொள்ளலும், தள்ளியும் என்பதற்குப் பிறர் தம்மை அவமதித்து ஒதுக்கியும் எனலும் ஆம், காட்சியார், பெயர்.

(7)

158. பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.

(பொ-ள்.)பிறர் மறையின்கண் செவிடாய் - பிறருடைய மறைந்த கருத்துக்களைக் கேட்டலிற் செவிடுடையனாய், ஏதிலார் இல்கண் குருடனாய்-அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடுடையனாய். தீய புறங்கூற்றின் மூகையாய்-தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையுடையனாய், திறன் அறிந்து நிற்பானேல் - வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள் இவையென்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், யாதும் அறம் கூறவேண்டா அவற்கு - அவனுக்குப் பிறர் வேறு யாதும் அறம் அறிவுறுக்கவேண்டா.

(க-து.)வாழ்க்கையில் துன்பம் உண்டாக்குங்கூறுகள் இவையென்றறிந்து மேன்மக்கள் அவற்றின் நீங்கியொழுகுவர்.

(வி-ம்.)திறனறிந்து நிற்பானேல் என்க. காதிருந்தும் கண்ணிருந்தும் வாயிருந்தும் ஒருவன் செவிடாய்க் குருடாய் ஊமையாய் நிற்கவேண்டுமிடம் இன்னவென்றது. இச் செய்யுளில் நயமுடையது. "சொல்லும் மறையிற் செவி