பக்கம் எண் :

139
 

(க-து.)பெரியார் இணக்கம் வாழ்க்கை யின்பம் மிகுத்து அதனைப் பயனுடையதாக்கும்.

(வி-ம்.)பொன்னே என்பதன் ஏகாரம் தேற்றமும், கழிப்பரே என்பதன் ஏகாரம் ஈற்றசையுமாம். அன்னோவென்னும் இடைச்சொல் இரக்கப்பொருள் குறித்தது. சான்றவர் மேன்மையில் மரீஇ இன்புறும் நயமின்மை கருதி; ‘நயமில் அறிவினவ' ரென்றார்; பயனில் பொழுது கழிக்கும் வீணரை நயமில் அறிவினவரென விதந்தது, மிக்க நயமுடைத்து. "நயனிலனென்பது சொல்லும் பயனில, பாரித்துரைக்கும் உரை"1என்பது திருக்குறள்.

(2)

163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான் மதிக்கற் பால; -நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.

(பொ-ள்.)அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்களான் மதிக்கற்பால- மதிப்பின்மையும் மிக்க மதிப்புமாகிய இரண்டும் மேன்மக்களாகிய பெரியோர்களால் மதித்தற்குரியனவாகும்; நயம் உணராக் கையறியாமாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் - நன்மையை உணர்தலில்லாத ஒழுக்கமறியாக் கீழ்மக்களின் இழிப்புரையும் உயர்த்தும் ஏத்துரையும், வடித்த நூலார் வையார் - தெளிந்த நூலறிவினையுடையோர் ஒரு பொருளாக மனத்துட்கொள்ளமாட்டார்கள்.

(க-து.)மேன்மக்கள்பால் மதிப்புப்பெற முயலுதல் வேண்டும்.

(வி-ம்.)ஆன்ற மதிப்பென்றது, நன்கு மதித்தலை உட்கொண்டு நின்றது. மிகைமக்கள் - மக்களில் மேம்பட்ட நன்மக்கள்; பொதுமக்களினும் மேம்பட்டோரென்று கொள்க. மாக்களென்போர் அப்பொதுமக்களினுங் கீழ்ப்பட்டோர். கை, ஈண்டு ஒழுக்கமென்னும் பொருட்டு, உணரா அறியா மக்கள் என்க; "மூவா முதலா வுலகம்"2என்புழிப்போல. சான்றோராயின், உலகில் நிகழுந் தகுதிகளைத்தம் உள்ளத்துமதித்து மகிழ்வர்; நிகழ்


1. 20 : 30
2. சிந். 1.