ஆழ்கலத் தன்ன கலி ' என்றார். வந்தது என இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.1 (2) 13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு. (பொ-ள்.)சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று - பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் - இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும், இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு - மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - மெய்யின்ப நெறியில் செல்லும் வகை, இல்லையே - உண்டாவதில்லை. (க-து.)வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை. (வி-ம்.)பண்டம் - பொருள் ; இங்கே உடம்புக்கு வந்தது. உயிரிருந்தும் உயிர்க்குரிய அறவினைகட்குப் பயன்படாமையால் உயிரில்லாததுபோல இழிவாக்கிப் பண்டம் என்றார். அது பழிக்கப்படுதலாவது இறக்குமுன் நெடுங்காலம் நோய் முதலியன கொண்டு பிறரால் இழித்துக் கூறப்படுதல். ‘பண்டம் பழிகாறும்' என்றது , சாகு மளவும் என்னும் குறிப்பின்மேல் நின்றது. மனைவியின்பால் அறிவான் அன்புறாமற் காமத்தான் பற்றுக்கொள்ள லென்பது, ‘செறிந்து' என்பதன் குறிப்பினாற் பெறப்படும். இல்லையே என்னும் ஏகாரம் இரக்கப் பொருட்டு. (3) 14.தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
1. தொல். வினை. 44
|