பக்கம் எண் :

140
 

வன தகுதியற்றனவாயின் அவற்றை மதியாமல் வாளாவிடுப்பரல்லது தூற்றார். நயமுணராக் கையறியாமக்களாயின், இழித்தலாயினும் அன்றி ஏத்துதலாயினும் தம் வாய்விட்டுக் கூறுவர். இவ்வியல்பு புலப்படுத்துவார், ‘இழிப்பும் எடுத்தேத்து' மென்று அவரது வாயுரைக்கண் வைத்து ஆசிரியர் விளக்கின ரென்க.

(3)

164. விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

(பொ-ள்.)விரிநிற நாகம் விடர் உளதேனும் உருமின் கடு சினம் சேண் நின்றும் உட்கும் - படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடிய ஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல; அருமையுடைய அரண் சேர்ந்தும் பெருமையுடையார் செறின் உய்யார் - அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச் சிறியோர் அதற்குத் தப்பமாட்டார்.

(க-து.)பெரியோர்க்குப் பிழை செய்து பின் அதிலிருந்து தப்புதல் இயலாது.

(வி-ம்.)விடரென்பது பிளப்பு: "விடர் முகையடுக்கம்"1என்பது அகநானூறு. இடி முழக்கத்தின் மேன் மேற் கடுமை சினமெனப்பட்டது. "அரண்சேர்ந்தும்' என்றதனால், என்றதனால், பெருமையுடையாரது சினம் அவ்வரண் முதலியவற்றையுங் கெடுக்குமென்பது பெறுதும். பெருமையுடையார் செறின் என்றமையின் ஏனைச் சிறியோர் உய்யார் என, வினை முதல் தானே பெறப்பட்டது.

(4)

165. எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.


1. அகநா. 47.