(பொ-ள்.)எம்மை அறிந்திலிர் எம்போல்வார் இல் என்று தம்மைத்தாம் கொள்வது கோள் அன்று - ‘எமது தகுதியை நீவிர் அறிந்தீரில்லை; எம்மைப்போன்ற தகுதியுடையார் பிறர் ஈண்டு இல்லை' என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது; தம்மை அரியரா நோக்கி அறன் அறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள்-தம்மை அருமையுடையராகக் கருதி, அறமுணருஞ் சான்றோர் பெரியரென்று மதித்தேற்றுக் கொள்ளுதலே பெருமையாகும். (க-து.)தம்மைச் சான்றோர் பெரியரென மதித்தேற்குமாறு தாம் செய்கையில் ஒழுகுதலன்றித், தம்மைத் தாமே பெரியரென - வாயுரையாப் புலப்படுத்திக் கொள்ளுதல் மதிப்புடைமையாகாது. (வி-ம்.)"வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை"1என்றார் பிறரும். ‘அரியரா, பெரியரா' ஈறு தொகுத்தல். தக்கோரென்னும் பொருட்டு, அறனறியுஞ் சான்றோரென்றார். அறிதலாவது ஈண்டு அறிந்தொழுகுதல். (5) 166. நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல விளியுஞ் சிறியவர் கேண்மை: - விளிவின்றி அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே தொல்புக ழாளர் தொடர்பு. (பொ-ள்.)நளி கடல் தண் சேர்ப்ப - பெரிய கடலின் குளிர்ந்த துறையையுடையவனே! சிறியவர் கேண்மை நாள் நிழல்போல விளியும்-சிறியோர் நட்புக் காலை நேரத்தின் நிழல்போலக் குறைந்து கெடும்; விளிவு இன்றி-அவ்வாறு குறைந்து கெடுதலில்லாமல், அல்கு நிழல்போல் - மாலை நேரத்தின் நிழல்போல, தொல்புகழாளர் தொடர்பு அகன்று அகன்று ஓடும்- பழைமை தொட்டு வரும் புகழினையுடையரான பெரியோர் நட்பு வளர்ந்து பெருகும்.
1. குறள்: 44 : 9. 2. தொல். உரி : 22.
|