(க-து.)இருக்க இருக்கப் பெருகும் நேயமாட்சிக் குரிய பெரியோரிடம் பிழைத்தலின்றி யொழுகி நலம் பெறல் வேண்டும். (வி-ம்.)நாள், நாளின் தோற்றநேரமாகிய காலைப் பொழுதை யுணர்த்திற்று, அல்கு, என்பது முதலிலைத் தொழிற்பெயர்: சுருங்குதல் என்பது பொருள்: பொழுது சுருங்குதலையுடைய நேரம் என்னுங் கருத்தில் ஆகுபெயராய் இங்கு அது மாலைக் காலத்தை உணர்த்தி நின்றது. மாலையென்றது ஈண்டுப் பிற்பகல். அடுக்கு மிகுதிப் பொருளது. தொல்புகழாளர் என்றார். புகழுக்குரிய நல்லியல்பும் பழக்கமும் இயற்கையாகவும் செயற்கையாவும் நெடுங்காலமாக உடையரென்னும் பொருட்டு. (6) 167. மன்னர் திருவும் மகளிர் எழினலமும் துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம் உழைதங்கட் சென்றார்க் கொருங்கு. (பொ-ள்.)மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும் - அரசர் வளமும் மகளிரின் எழுச்சியழகும், துன்னியார் துய்ப்பர் - அவர்களுடன் நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: தகல் வேண்டா-நேயம் என்னும் அந் நெருக்கமல்லது அதற்குத் தகுதியுடைமை வேண்டா: துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரமெல்லாம் - நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ள குளிர்ச்சியான மரங்களெல்லாம், உழை தங்கட் சென்றார்க்கு ஒருங்கு - தம்மிடம் வந்தடைந்தா ரனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும். (க-து.)ஆதலால், நேயத்தால் தம்மை அடைந்தவரிடம் தகுதி வேறுபாடுகள் கருதாமல், பெரியோர் அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்ப ரென்க. (வி-ம்.)உவமைகள் மூன்றும் இருவகையாகப் பெரியோர் மாட்சிமை யுணர்த்தின சிறப்பாக நேய நெருக்கமுடையோர் துய்த்தற்கு முதலிரண்டு உவமைகளும், தகுதி வேறுபாடு கருதாமைக்குப் பின் ஓர் உவமையும் வந்தன வென்க. இதனாற் பெரியோரது திருநலம்.
|