(பொ-ள்.)கல்லாது போகிய நாளும் - கற்றற்குரிய நூல்களைக் கல்லாமற் கழிந்த நாட்களும், பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும்-கேள்வியின் பொருட்டுப் பெரியோர்பாற் செல்லாது நின்ற நாட்களும், ஒல்வகொடாது ஒழிந்த பகலும் - இயன்ற பொருள்களை உரியவர்களுக்கு உதவாமல் நீங்கிய நாட்களும், உரைப்பின் - சொல்லுமிடத்து, பண்புடையார்கண் படா-நல்லியல்புடைய பெரியோர்களிடம் உண்டாகமாட்டா. (க-து.)கல்வி கேள்விகளும் ஒப்புரவும் என்றும் பெரியோர் உடையராயிருப்பர். (வி-ம்.)சாந்துணையுங் கற்றலும்,1செவிக்குணவில்லாத போழ்து வயிற்றுக்கு ஈதலும்,2‘இரவரலர்க்கு அருங்கலம் வீசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைக' லெனக் கருதலும்,3நல்லோர் இயல்பாகலின், இங்ஙனம் கூறினார். ஒல்வ : வினையாலணையும் பெயர். அளபெடைகள் செய்யுளோசை நிறைத்து நின்றன. ஆம்: அசை. (9) 170. பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற் குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால், செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார் அல்லல் களைப வெனின். (பொ-ள்.)பெரியார் பெருமை சிறு தகைமை - கல்வி கேள்விகளிற் பெரியாருடைய பெருமைக் குணமாவது யாண்டுந் தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார் உரிமை அடக்கம் - வீடுபேற்றிற்கு உரியரான மெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாது மனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்; தெரியுங்கால் - ஆராயுமிடத்து, செல்வமுடையாரும் செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் - தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களை நீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும் செல்வரேயாவர்.
1. குறள். 40 : 7 2. குறள். 42 : 2 3. புறம். 367
|