(க-து.)செல்வமும் கல்வியும் மெய்யுணர்வுமுடைய பெரியோர், யாண்டும் உதவியும் பணிவும் அடக்கமு முடையராயிருப்பர். (வி-ம்.)சிறிய தன்மையுடையார்போல் தாழ்வுடையராயிருத்தலின் அப் பணிவுடைமையை ஈண்டுச் சிறு தகைமையென்றார். சிறப்பு நோக்கி வீடுபேறு, ஒன்றெனப்பட்டது. தற்சேர்ந்தார், ஒருமை பன்மை மயக்கம். "தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடியாதார்"1என்றார் பிறரும். பெரியாராயினார் இத்தகையினராதலின் இது தெரிந்து இந் நிலைகட்கேற்ப அவர்பாற் பிழைபடா தொழுகிக் கொள்க வென்பது கருத்து. இவ்வதிகாரத்தில் பெரியாரியல் புரைப்பனவாய் வந்திருக்கும் இது போன்ற செய்யுள்கட்கும் இவ்வாறுரைத்துக் கொள்க. (10) 18. நல்லினம் சேர்தல் [உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்.] 171. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. (பொ-ள்.)அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் - அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில் அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்து முறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும், வெயில் முறுகப் புல் பனிப்பற்று விட்டாங்கு-வெயில் கடுகுதலால் புல்நுனியைப் பனியின் பற்றுதல் விட்டாற்போல, நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடும் - நன்னெறி தெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச் சார்ந்து பழகுதலால் கெடும்.
1. ஐந். ஐம். 48.
|