(க-து.)தீய குணங்கள் நீங்கும் பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல் வேண்டும். (வி-ம்.)அடங்கார்: வினையாலணையும் பெயர்: செய்தொழுகி யவ்வும் என்பதில் வகரம் விரிந்தது: உம்மை நல்லோர் சேர்க்கையால் நல்லன பெறுதலோடு என்னுங் கருத்துணர்த்துதலின் எச்சம். (1) 172. அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்: பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்; வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். (பொ-ள்.)அறிமின் அறநெறி - கடமை யொழுங்கை அறிந்தொழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் - நமன் வருதற்கு அஞ்சி யொழுகுங்கள்; பொறுமின் பிறர் கடுஞ்சொல்-பிறர் கூறும் வன்சொற்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் - வஞ்சித்தொழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்; வெறுமின் வினை தீயார் கேண்மை - செய்கை தீயவரது நட்பை வெறுத்தொதுக்குங்கள்; எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல் - எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும் நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள். (க-து.)நல்லாரினத்தைச் சார்ந்து பழகி அதனால் அறநெறியறிதல் முதலிய நலன்களைப் பெறுதல் வேண்டும். (வி-ம்.)இச்செய்யுள் நல்லினம் சார்தற்குரியாரை நோக்கிற்று, அறிமின் முதலியன, அறிந்து அந்நெறி நிற்றலை யுணர்த்தா நின்றன. கூற்றம் அஞ்சுதலாவது அருள்வழி நின்றொழுகுதல். ‘வஞ்சம் போற்றுமின்' என்றது, தம்மைச் சாராதவாறு காத்துக்கொள்ளுதலென்க. "புறஞ் சொற் போற்றுமின்"1என்றார் பிறரும். வினை தீயார் - தீய செயலுடையார். பெரியார் வாய்ச் சொல் பெறுதற்கு அறநெறி யறிந் தொழுகுதல் முதலியன இன்றியமையாதன வாதலின், அவற்றை முறையே முற்கூறினார்.
1. சிலப் 30 : 188.
|