ஒரோவொருகாற் பிற நெறிகள் தவறினும் பெரியார் வாய்ச்சொல் பெறுதல் ஒருபோதுந் தவறலாகா தென்றற்கு, எஞ்ஞான்றும் என்னுஞ் சொல் அதனையடுத்து நின்றது. (2) 173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு. (பொ-ள்.)அடைந்தார்ப் பிரிவும் அரு பிணியும் கேடும்- இயற்கையாகவும் செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர் நண்பர் முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரிய நோயும், இறப்பும், உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் -பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கே பொருந்துதலால், தொடங்கி - ஆராயத் தொடங்கி, பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை - பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்து பற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை, உறப் புணர்க என் நெஞ்சு - என் உள்ளம் மிகக் கூடுக. (க-து.)துன்பந் தரும் பிறப்பை அதன் இயல் பறிந்து பற்று நீங்கி யொழுகும் ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்தொழுகுதல் வேண்டும். (வி-ம்.)‘உற்றோர் முதலியோரைப் பிரிந்து நிற்க நேர்ந்தால், அப்போது இவ்வுடம்புக்குப் பற்பல வசதிகள் குறைந்து துன்பங்கிளைத்தலால் அவையெலாம் ‘அடைந்தார்ப் பிரிவும்' என்பதில் அடங்கும். உடங்கு உறலால் என்க. உடம்பு இலக்கணையாற் பிறவியை உணர்த்திற்று. இத்துன்பப்பிறவியை மகிழ்தல் அறிவுடைமையாகாமையின் இன்னாதென்றுணர்தல் பேரறிவுடைமையாயிற்று. "இளமை மகிழ்ந்தாரே ...... இன்னாங் கெழுந்திருப்பார்"1என்றார் முன்னும். அம்மா:அசை. நல்லினம் என்பது சிறப்பாக ஞானியரினம் என்பது இச்செய்யுட் கருத்து. (3)
1. நாலடி. 2 : 1
|