பக்கம் எண் :

148
 

174. இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

(பொ-ள்.)பிறப்பினுள் - தாம் பிறந்த பிறப்பில், பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றி நட்கப்பெறின் - பிறர்க்கு உதவிசெய்யும் நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும் நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும் முனியார் - மிக ஆராயுமிடத்துத் துன்பந்தருவதென்றாலும் அப்பிறப்பினை யாரும் வெறுக்கமாட்டார்கள்.

(க-து.)பிறவி துன்பந் தருவதாயினும் நல்லாரினத்தோடு நேயங் கொண்டிருக்கப் பெறின் அதனை யாரும் வெறார்.

(வி-ம்.)பிறவி நன்முறையிற் செல்லுதலின் வெறுக்கப்படாதாயிற்று. பிறப்பினுள் நட்கப்பெறின் அப்பிறப்பினை, இன்னாதெனினும் யாரும் முனியாரென்று கொள்க. பண்பென்பது பாடறிந்தொழுக1லாதலின், ஈண்டு உதவி யெனப்பட்டது. அது, நல்லார் இலக்கணம் இன்னதென்பதுணர்த்தும் பொருட்டு நின்றது.

(4)

175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

(பொ-ள்.)ஊர் அங்கண் நீர் உரவுநீர் சேர்ந்தக்கால் - ஊரின் சாக்கடை நீர் கடலைச் சேர்ந்தால், பேரும் பிறிதாகித் தீர்த்தம் ஆம் - பேரும் கடல் நீர் என்று வேறாகி அருள் நீராகும், ஒரும் குலமாட்சி இல்லாரும் - மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாத கீழோரும், குன்றுபோல்


1. கலித். 133 : 8