பக்கம் எண் :

149
 

நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து - குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர் நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்து விளங்குவர்.

(க-து.)கீழோரும் மேலோரைச் சேர்ந்தால், மேலோரேயாவர்.

(வி-ம்.)உரவுநீர், வலிமையுடைய நீரென்னுங் கருத்திற் கடல் நீருக்கு வந்தது. தீவினைகளைத் தீர்க்கும் அருளியல்பு வாய்ந்த நீர் தீர்த்தம் என்பபடுவதாயிற்று. குலம் - நல்லோர் சூழல், நலம், ஈண்டுப் பண்பு, குன்று போல் நிற்பரென்றார். பின் அந்நிலையினின்றும் வழாரென்றற்கு.

(5)

176. ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.

(பொ-ள்.)ஒள் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படும் - இனிய கதிர்களையுடைய ஒள்ளிய திங்களைச் சேர்தலால் அழகிய இடமகன்ற வானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்; குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின் - ஆதலால், குறைந்த நிலைமையுடையராயினும் மக்கள் மலைபோன்ற பெருமையுடைய நல்லாரது நேயத்தை யடைந்தால் நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.

(க-து.)மக்கள், நல்லார் நேயத்தராயிருப்பின் சிறப்புறுவர்.

(வி-ம்.)வான்மதியம் என அடுத்து வருதலின் கதிர்க்கு ஒண்மையாவது இனிமையென்று கொள்க. ஒண்மைக்கு இந் நன்மைப் பொருளுண்மை பிங்கலந்ததையிற்1காணப்படும். முயல், திங்களின்கட் காணப்படும் மறு. பிறை


1. பிங். 10 : 210