(பொ-ள்.)தாழா - முதுகு தாழ்ந்து , தளரா - உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா - தலை நடுங்கி, தண்டு ஊன்றா - கையில் தடி ஊன்றி, வீழா - விழுந்து, இறக்கும் - இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும் - இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா - உறுதியான அறிவில்லாத, மம்மர்கொள் மாந்தர்க்கு - காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல் - அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல், அம்மனைக்கோல் ஆகிய ஞான்று - அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில், அணங்கு ஆகும் - வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும். (க-து.)முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலைநடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது. (வி-ம்.)முதுகு வளைந்து கூன் அடைந்து என்றதற்குத் தாழா எனப்பட்டது. ‘இவள் மாட்டும்' என்னும் உம்மை இழிவு சிறப்பொடு எச்சமும் உணர்த்திற்று. காழ் - உரம் ; இங்கே அறிவு உரம். அணங்கு - வருத்தும் அழகுருவம் ; பரிமேலழகர், "அணங்கு காமநெறியான் உயிர் கொள்ளுந் தெய்வமகள்"1என்றதும் இப்பொருட்டு. அணங்கா யிருந்திருக்கும் என்னும் பொருளில் "அணங்காகும் " என வந்தது. இப்போது மூத்திருக்கும் இவள் கையின் கோல் இவள் தாயின் கையில் ஊன்றுகோலாயிருந்த போது இவள் இளமையுடையவளாய் இருந்திருப்பாள் என்பது குறிக்கத் ‘தன்கைக்கோல் அம்மனைக் கோலாகிய ஞான்று' எனப்பட்டது. இவள் இளமைக் காலத்தில் என்று குறித்தற்கு இங்ஙனம் வந்தது ; ஈதுகாண் உலகியல்பு என்று அறிவுறுத்துதற்கு. இது மேற் செய்யுளாலும் உணரப்படும். (4)
1 குறள், 92 : 8
|