பக்கம் எண் :

150
 

தொழுதல் வழக்கமாதலின்,1அதன்கண் உள்ள மறுவும் தொழப்படுவதாயிற்று. சீர்மை, பொதுவாக ஈண்டு நிலைமை என்னும் பொருட்டு. நிலை வழுவாதவராகலின், நல்லோர் குன்றன்னா ரெனப்பட்டனர். அவரோடு கேண்மை கொள்ளுதலாவது அவர் அன்புக்குரியவராய் அவர் இனத்தவராய் இருத்தலென்க.

(6)

177. பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; -தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

(பொ-ள்.)பாலோடு, அளாய நீர் பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்து தோன்றாது-பாலோடு கலந்த நீர் பாலாகித் தோன்றுமல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித் தோன்றாது; தேரின்-ஆராய்ந்தால், சிறியார் சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து - உயர்ந்த பெரியாருடைய பெருந்தன்மையைச் சார்தலால் சிறியார் குறைபாடுந் தோன்றாமற் பெருமையேயாகும்.

(க-து.)மக்கள் பெரியாரோடு சேர்ந்திருந்து தம் குறை நீங்கிப் பெருமையடைதல் வேண்டும்.

(வி-ம்.)உவமையில் நீராய்த் தெரியாமையும் பாலாய் நிறமாதலுங் கூறப்பட்டமையின், பொருளிலும் சிறுமை தோன்றாமையோடு பெருமை உருவாதலும் உரைத்துக்கொள்க. நீர் தன் நிறந்தெரிந்து தோன்றா தென்றமையின் பால் நிறந்தெரிந்து தோன்றுமென்பது பெறப்பட்டமையால் அவ்வாறே சிறியோர்க்குங் கொள்க. "உவமப் பொருளின் உற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்தியலான"2என்பதனான் இங்ஙனங் கொள்ளப்படும். ஆம் இரண்டனுள் முன்னது அசை. நல்ல என்னும் அடைமொழி இயல்புணர்த்தியபடி.

(7)


1. குறுந். 307.
2. தொல். உவம. 20.