15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய் ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண் டேகும் அளித்திவ் வுலகு. (பொ-ள்.)எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் நாடி - தனக்குத் தாய் விரும்பி, சென்றாள் - இறந்துபோனாள் ; தனக்குத் தாய் ஆகியவளும் - அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும், அது ஆனால் - அவ்வாறே போனால், தாய் தாய்க்கொண்டு - ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு , ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க. (க-து.)இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாதென்பது திண்ணம். (வி-ம்.)‘இட்டு' என்னுஞ் சொல், ‘என்னை இங்கே பெற்றெடுத்து விட்டுத் தன்னை ஒருத்தி பெற்றெடுக்கு மாறு பிரிந்தாள்' என்னுங் குறிப்பின் உறுப்பாய் நின்றது. ஏ : இசைநிறை. தாய்க்கொண்டு - தாவிக்கொண்டு. இயல்பாயிருத்தலின், உலகுக்கு எளிமை கூறினார். (5) 16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். (பொ-ள்.)வெறி அயர் வெம் களத்து - வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி - வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் இடையிடையே பொருந்திய மணமமைந்த மலர்மாலை, முன்னர் தயங்க - தன்னெதிரில் விளங்கா நிற்க, மறி - அதைக் கண்ட பலி ஆடு, குளகு
|