பக்கம் எண் :

18
 
வீழ்ந்தாற்போலுந் தன்மையது ; இவளும் குனிந்து - இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, கோல் கண்ணள் ஆகும் - வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் ; வேல் கண்ணள் என்று - இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று, இவளை - இந்த இளந்தன்மையாளை. நனி பெரிதும் வெஃகன்மின் - மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம்.

(க-து.)இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும்.

(வி-ம்.)உவமையிற் சுட்டிய தன்மைகள் பொருளுக்கும் ஒக்கும். இளமை யாவர்க்கும் ஒரு படித்தாய்க் கெடுதலின், ‘மரமெல்லாம்' என்றார். வீழ்தலின் லிரைவு தோன்ற ‘உதிர்ந்து வீழ்ந்தற்று' என்றார். "நனிபெரிதும்" ஒரு பொருளில் வந்த இருசொல் ; அது வெஃகுதலின் முடிவின்மையையும் இளமைத் தன்மையை அளவாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கடமையையுங் குறித்துநின்றது. இவள் என்னுஞ் சுட்டுக்கள் இரண்டுள் முன்னது ஒரு மாதையும் பின்னது அவள் இளமைப் பண்பையுஞ் சுட்டி நின்றன. கோல்கொண்டு வழி தெரிந்து செல்லுதலின் ‘கோல் கண்ணள்' எனப்பட்டது. மற்று: வினைமாற்று.

(7)

18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

(பொ-ள்.)பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை - பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ - இரண்டு பிடியேனும் உண்கின்றீர்களா, என்று வரிசையால் - என்று ஒன்றன்பின் ஒன்றாக, உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - இங்ஙனம் பிறரைப்பற்றித் தமக்குள் ஆராயும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதனால், யாக்கைக் கோள் - உடம்பின் இளமையை, எண்ணார் அறிவுடையார் - அறிவுடையோர் ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள்.