பக்கம் எண் :

4
 

2. துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

(பொ-ள்.)துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் - பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது - உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால் போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும்.

(க-து.)செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

(வி-ம்)பொருள் நல்ல வழியில் வரவேண்டும் என்பது தோன்றத் ‘துகள் தீர்' என்றும், செல்வம் தோன்றுவது உறுதியன்று என்பது தோன்றத் ‘தோன்றியக்கால்' என்றுங் கூறினார். பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான செல்வம் ; வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது குறிப்பு. தோன்றியக்கால் ஒற்று மிகுந்தமையால் வினையெச்சமாகப் பொருள் கொள்ளப்படும். பகடு - கடா ; இங்கே அது பூட்டிய ஏர். நடந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருளில் வந்தது ; ஆகவே, ‘நடந்ததனால் உண்டான' என்று உரைத்துக் கொள்ள வேண்டும். பல்லார், பல பிரிவினர் என்பது காட்டும் ; அவர் விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர், அகடு - உறுதி. யார்மாட்டும் என்றது. எவ்வளவு விழிப்புடையவரிடத்தும் என்பது. நில்லாது - நில்லாமல், வரும் - கை மாறி மாறி வரும்.

(2)

3. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.