பொருள்கள், நில்லா என - நிலைபெறா என்று, உணர்ந்து - தெரிந்து, ஒன்றின ஒன்றின - இசைந்தன இசைந்தனவாகிய அறங்கைள, செயின் - செய்யக் கருதுவீர்களானால், வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக. (க-து.)வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப் பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும். (வி-ம்.)ஒல்லும் அளவு அறஞ் செய்க என்றற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின் அருமை தோன்றச் ‘செயின்' எனவுங் கூறினார். ‘செல்கின்றன' என்னுங் கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ் சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும், "கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும் நச்சினார்க்கினியருரை1இங்கே நினைவு கூரற்பாலது.(4) 5. என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம். (பொ-ள்.)என் ஆனும் ஒன்று - யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் - தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா - இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.
1. தொல், புறத். 24.
|