பக்கம் எண் :

7
 

(க - து.)இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.

(வி - ம்.)சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாயிருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது ; அஃதாவது, பெற்ற உடனே என்பது ; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.

(5)

6. இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.

(பொ-ள்.)இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள்.

(க-து.)குறித்த ஆயுளுக்குமேல் யாரும் உயிர் வாழ்தல் கூடாமையின் , உடனே அறஞ்செய்து நலம்பெறுதல் வேண்டும்.