(வி-ம்.)இழைத்த - உண்டாக்கிய ; வைத்தீர், இங்கே பெயர். தழீஇம் தழீஇம் என்பது ஒலிக்குறிப்பு. படும் - ஒலிக்கும் ; இறப்பு நேரும் என்றற்குத் ‘தண்ணம் படும்' என்றார். தமக்கு வேண்டிய அளவுக்குமேற் பொருள் படைத்திருப்பவர், அங்ஙனம் மேற்பட்ட பொருளைப் பிறர்க்கு வழங்குங் கட்டாயமுடைய ராதலின், இச்செய்யுள் அவரை நோக்கிற்று. (6) 7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். (பொ-ள்.)கூற்றம் - யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக - நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் - உம் வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் - மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும் - அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் - பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர். (க-து.)அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக. (வி-ம்.)ஞாயிறு தோன்றுதலும் மறைதலுமே ஒரு நாளுக்கு அடையாளமாதலால், அது ‘தோற்றம் சால்' என்னும் அடைமொழி கொடுத்து, அளவு கருவியாக உருவகஞ் செய்யப்பட்டது. பகலவனை நாழியாகக் கொண்டமையால் , கூற்றுவன் உண்ணுவதற்கு, நாள் தானியமாகக் கொள்ளப்பட்டது. ‘ஒறுக்குங்' குறிப்புத் தோன்ற, ‘உண்ணும்' என்றார், ‘பிறவாதாரில் ' என்பதன் பின் ஒரு சொல் வருவித்துக் கொள்க. உயிர் அருள்வடிவாகு
1. குறள், 4, 3
|