பக்கம் எண் :

9
 
மளவும் அறஞ்செய்து கொண்டேயிருக்க என்றற்கு ‘ஆற்ற அறஞ்செய்து' எனப்பட்டது.1"அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல்" என்பதனாலும் இக்கருத்து அறிந்துகொள்ளப்படும்.
(7)

8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

(பொ-ள்.)செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத - தாம் இனிச் செல்லவிருக்கும் மறுமையுலகத்தை நினையாத, புல் அறிவாளர் பெரு செல்வம் - சிறிய அறிவுடையவரது மிக்க செல்வம், எல்லில் - இரவில், கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி - கரியமேகம் வாய் திறந்ததனாலுண்டான மின்னலைப்போலச் சிறிதுகாலந் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் - இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோம்.

(க-து.)மறுமையுலகத்தை எண்ணி வாழாதவர்களுடைய செல்வம், மின்னலைப்போல தோன்றி அழியும்.

(வி-ம்.)செல்உழி - செல்லும் இடம் ; இங்கே மறுமை குறித்து நின்றது. செல்லுழி என்பது ‘செல்வுழி ' என மருவி முடிந்தது ; "எல்லா மொழிக்கும்"2என்னுந் தொல்காப்பிய நூற்பாவின் நச்சினார்க்கினியருரை கருதுக. அறியாமையில் மிளிருஞ் செல்வமாதலின், இருளில் ஒளிரும் மின் உவமையாயிற்று. கொண்மூ நீரைக்கொள்வது என்னுங காரணப் பெயர். மின்னு ; மின்னுதல் என்னுந் தொழிற் பெயரில் வந்தமையின் அப்பொருள் தோன்ற உகரச்சாரியை பெற்று, அதுவே பின் தொழிலாகு பெயராயிற்று. மருங்கும் என எச்சவும்மை கொள்க. செல்வம் இயல்பாகவே நிலையாமையுடையதாயினும் அது மின்னலைப்போல் அத்தனை விரைவில் அழிந்து போதற்


1. குறள், 4 : 3.
2. தொல் . புண : 38.