பக்கம் எண் :

12

ஒளியுள்ள அரிதாரம், மான் வயிற்றின் பிறக்கும் - மான் வயிற்றில் உண்டாகும்; பல் விலைய முத்தம் - மிக்க விலையுடைய முத்துக்கள், பெருகடலுள் பிறக்கும் - பெரிய கடலினுள் பிறக்கும்; நல் ஆள் - நல்ல மக்கள், பிறக்கும் குடி - பிறக்கும் குடியை, அறிவார் யார் - முன்பே அறிய வல்லவர் யார்? (யாருமில்லை.)

(க-து.) எக்குடியினும் நன்மக்கள்தோன்றுவர்.

(வி-ரை.) கள்ளி - சதுரக்கள்ளி; அகின்மரம் வேறேயிருப்பினும், இக் கள்ளியினுள் உண்டாகும் உள்ளீடு அகில் போல் மணமுடைமையின் இதனையும் ‘அகி' லெனக் கொள்வர்.விலைய : குறிப்புப் பெயரெச்சம், பல்விலைய என்பதிற் பன்மை மிகுதி மேற்று.ஆள் - நல்லியல்புகளை ஆளும் நன்மக்கட்குப் பெயராய் வந்தமையின் தொழிலாகு பெயராம்.எக்குடியினும் நல்லார் பிறத்தலைப் பண்டும் இன்றுங் காண்கின்றமையின், அவர் பிறக்குங் குடி இதுதானென்று துணிந்தறிதல் கூடாமையின் ‘அறிவார் யார்'என்றார்.

(6)

 7. கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று1
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும்.

(இ-ள்.)கதிர்மணி - ஒளியுள்ள மணிகள், கல்லில் பிறக்கும் - மலையில் உண்டாகும்; உயர் மதம் - மிக்க களிப்பு, காதலி சொல்லில் பிறக்கும் - காதலியினது இன்சொல்லினால் தோன்றும்; அறநெறி - அறவழிகள், மெல் என்ற அருளில் பிறக்கும் - மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும்; எல்லாம்-அவ்வறத்தோடு ஏனைய இன்பம் முதலியவெல்லாமும், பொருளில் பிறந்துவிடும் -செல்வத்தினால் உண்டாய்விடும்.

(க-து.) மணிகள் மலையிலும், இன்பம் காதலியின் சொல்லிலும், அறநெறி அருளிலும், அவ்வறமும் இன்பமும் முதலான ஏனையஎல்லாப் பேறுகளுஞ் செல்வத்திலும் உண்டாகும்.


(பாடம்) 1 மெல்லென்.