(வி-ரை.) கல் - கருவியாகு பெயராய் மலையையுணர்த்தும். கற்புடைய மனைவியின் சொல்லில்இன்பம் பயக்குமென்பார், ‘காதலி சொல்லில்' என்றார்.மெல்லென்ற அருள், அகரம் தொக்கது.அறநெறிக்கு அருளெண்ணமே ஏதுவென்பதற்கு ‘அருளிற் பிறக்கும் அறநெறி' எனப்பட்டது.‘அறனு மருளுடையான் கண்ணதே யாகும்' என்பது சிறு பஞ்சமூலம்.அறமும் இன்பமுமெல்லாம் பொருளிற் பிறந்து விடுதலைப் ‘பொருளானா மெல்லாம்' (106 : 2)என்னும் திருக்குறளாற் றெளிக. (7) 8. திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக் கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. (இ-ள்.)தீது இல் ஒழுக்கம் - தீமை கலவாத நல்லொழுக்கம், திரு ஒக்கும் - செல்வத்தை யொக்கும்; ஆற்றின் ஒழுகல் - முறைப்படி ஒழுகுதல், பெரிய அறன் ஒக்கும் - சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்; பிறனை - பிறனொருவனை, கொண்டு - நட்பாகக் கொண்டு, கண் மாறல் - பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல்,கொலை ஒக்கும் - அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்; போற்றாதார் முன்னர் - தம்மை மதியாதாரிடத்தில், செலவு - சென்று ஒன்றை நயத்தல், புலை ஒக்கும் - இழி தகைமையைஒப்பதாகும். (க-து.) நல்லொழுக்கம் செல்வம்போன்றது; முறையான இல்லற வொழுக்கம் துறவறத்தைப்போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலைசெய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம்மதித்தல் இழிதகைமையாகும். (வி-ரை.) நல்லொழுக்க முடையார் செல்வரைப்போல் நன்மதிப்பும், வாழ்க்கையில் இடுக்கணின்மையும், உயர்வும் புகழுமான இம்மை நலங் களையும் பெற்றிடுதல் திண்ணமாதலின், ‘திருவொக்கு,' மென்றார்.முறையான உலகவாழ்க்கை துறவற வாழ்க்கையை யொத்தலின், ‘பெரிய அறன் ஒக்கு' மெனப்பட்டது. பெரிய அறன் - துறவறம்.ஆற்றின் - இல்லற ஆறு: 'அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற், போஒய்ப் பெறுவதெவன்' (திருக்குறள், இல்வாழ்க்கை. 6) என்பதுங் காண்க.
|