பக்கம் எண் :

16

இதுவுமது

15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது.

(ப-ரை.) திருந்திழாய் - திருந்திய அணிகளையுடையாய், குருந்தின் - குருந்த மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங்கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறைவிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட வண்டுகள்பாட, இரு தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் -நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ-று.

திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயர் விளியேற்றுத் திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற் பெயர் உறையும் கடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பனகாண்' என்பது மணிமேகலை.

(15)

இதுவுமது

16. சுருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கண் கொள.

(ப-ரை.) பெருந்தோள் - பெரிய தோளினையுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற - செயலாற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலி வானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் -முழங்காநிற்கும், எ-று.


1. அசோகினிளந்தளிர் என்றும் பாடம்