பட்டு, அயிர்மணல் - இளமணலையுடைய, தண் புறவின் - குளிர்ந்த காட்டிண்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடி வானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தனித்திருக்கும் ஒருத்திமாட்டு (அவளை வருத்துவான்வேண்டி), இழிய - மழைபெய்ய எழும் - எழா நின்றது, எ-று. பாதிரி : ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமை யோர்க, ‘புன்காற் பாதிரி வரிநிறத்திரள்வீ' என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல் ; ‘வளியிடை', ‘போழப்படா அமுயக்கு' என முப்பாலினும் இப்பொருட்டாயது இது. அயிர்மணல் - இளமணல், ஆவது நுண்மணல். ஆலி - நீர் திரண்ட கட்டி, உழிய எனப் பாடங்கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் எனமுடிக்க. நேற்றுமுதல் தனிமையால் வருந்துவாள் எனினும் அமையும் பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினைமுடிவு செய்க. (3) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது 4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக் காடுங் கடுக்கை கவின்பெறப்1 பூத்தன பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி வாடும் பசலை மருந்து. (ப-ரை.) ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர்போல மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின்பெற - அழகுபெற, பூத்தன- மலர்ந்தன ; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப் பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப் பருவமானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும், எ-று. மகளிரின் என்பதில் இன் உவமவுருபு. மஞ்ஞை கார்காலத்திற் களிப்புமிக்கு ஆடுதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் : உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று ; காடுமுதலும் கடுக்கை சினையுமாகலின், வாடும் : காரண காரியப்பொருட்டு. (4)
1. கவின்கொள என்றும் பாடம்.
|