பக்கம் எண் :

10

2. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் 
ஆர்த்தம ரட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடான் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், ஆர்த்து - குணலையிட்டு, அமர் - போரில், அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஞாட்பின்உள் - படையின் கண், எஞ்சிய - ஒழிந்த, ஞாலஞ்சேர் - நிலத்திற்சேர்ந்த, யானை கீழ் - யானைகளின் கீழ் (கிடந்த), போர்ப்புஇல்- மேற்போர்வை யில்லாத, இடி - இடிபோன்றொலிக்கும், முரசின் ஊடுபோம்- முரசத்தினூடு செல்லும், ஒள்குருதி - ஒள்ளிய உதிரம், கார் பெயல் பெய்தபின் - கார்காலத்து மழைபெய்த பின்பு, செங்குளம் - செங்குளத்தினது, கோடு கீழ் - கரையின் கீழுள்ள, நீர் தூம்பு - மதகுகள், நீர் உமிழ்வ - நீருமிழ்தலை போன்ற - ஒத்தன எ - று.

செங்குளம் - செம்மண்ணாற் சிவந்த நீரையுடைய குளம் பொருளின்கண் உள்ள குருதி யென்னும் பெயருக்கேற்ப உவமைக் கண் உமிழ்தலையுடைய நீர் என மாற்றுக. கார்:பருவத்திற்கு இருமடி யாகுபெயர். போன்ற:போல் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று. 

(2)

3. ஒழுங்குங் குருதி யுழக்கித் தளர்வார்
இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர்1
மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை யட்ட களத்து.

(ப-ரை.) மழை குரல் - மேகத்தின் முழக்கம்போலும் முழக்கத்தையுடைய, மா முரசின்- பெரிய முரசினையுடைய; மல்கு நீர் நாடான் - நிறைந்த நீரினையுடைய நாட்டினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை - தப்பியவரை, அட்ட கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஒழுக்கும் குருதி புக்காரை ஒழுகச் செய்யுங் குருதியை உழக்கி - கலக்கி, தளர்வார் - (அதனைக் கடக்காலாற்றாது) தளர்ச்சி யுறுவார். இழுக்கும் - மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு - யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் - ஊன்றுகோலாகக் கொண்டு எழாநிற்பர் எ-று.


1. 'எழூஉம்' என்றும் பாடம்.