பக்கம் எண் :

11

ஒழுக்கும் - ஒழுகும் என்பதன் பிறவினை; ஒழுகல் - கால் தளர்ந்து செல்லுதல்; இதனை, 'பரங்குன்றினிற் பாய்புனல் யாமொழுக' என்னும் கோவையாரால் உணர்க. இழுக்குதல் - தவறுதல்; ஆவது வெட்டுண்டு கிடத்தல். முரசினையுடைய நாடன் என்றும், தளர்வார் ஊன்றி யெழுவர் என்றுங் கூட்டுக. 

(3)

 4. உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் 
பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற்
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை யட்ட களத்து.

(ப-ரை.) செங்கண்மால் - செங்கட்சோழன், புல்லாரை பகைவரை; அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் - அஞ்சத்தக்க கடிய தேரை, முருக்கி - சிதைத்து, அ தேர் பரிதி - அந்தத் தேருருளினை, சுமந்து எழுந்த யானை - சுமந்தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் - பெரிய வானத்தில், செல் சுடர் - செல்லுகின்ற ஞாயிறு; சேர்ந்த மலைபோன்ற - அடைந்த மலையையொத்தன எ-று.

உரு என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்தது. இஃது அச்சம் என்னும் பொருட்டாதலை 'உரு வுட்காகும்' என்பதனால் அறிக. மற்று:அசைநிலை, பரிதி-இது பருதியெனவும் வழங்கும். பருதி-வட்டம்; தேருருளை, வட்டமுடைமையின் பருதியெனப்பட்டது; 'சுரம்பல கடவும் சுரைவாய்ப் பருதி' என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக. சுடர்: ஆகுபெயர், போன்ற; அன் பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். திருமாலின் வழியில் வந்ததமையால் சோழனுக்கு 'மால்' என்பது ஒரு பெயர்; பெரும்பாணாற்றில் 'முந்நீர்வண்ணன் புறங்கடை' என வருவது காண்க. 

(4)

 5. தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா ரட்ட களத்து.

(ப-ரை.) செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரிகணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த - திறக்கப்பட்ட, எல்லாவாய் (உம்) - எல்லாப் புண்களின் வாய்களினின்றும், குருதி படிந்து - (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்டகாகம் - (அவ்வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின்