புறத்தையுடையவாகிய, சிரல்வாய் - சிச்சிலிக் குருவி போன்ற வாயையுடையவாயின எ-று. வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை 'உண்ணு நீ ரூட்டிவா' என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை 'குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே' என்னும் பிங்கலந்தையான் அறிக சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; 'புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்' என்பது சிறுபாண். (5) 6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த- இடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலை 1தூறெறிந் தற்றே யருமணிப் பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன் தெவ் வேந்தரை யட்ட களத்து. (ப-ரை.) அரு மணி- (பெறுதற்கு) அரிய மணிகள் (அழுத்திய) பூண் ஏந்து - அணிகலத்தை யேந்திய, எழில் - எழுச்சியையுடைய, மார்பு - மார்பையும், இயல் - நடத்தலையுடைய, திண் தேர் வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட் சோழன். தெவ்வேந்தரை - பகையரசரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், நால் நால் திசையும் - பல திசைகளிலும், பிணம் பிறங்க - பிணங்கள் மிக, யானை அடுக்குபு யானைகளடுக்கப்பட்டு, ஏற்றிக்கிடந்த உயர்ந்த கிடைந்தன, இடித்து உரறி - இடித்து முழங்கி, அம் கண் - அழகிய இடத்தையுடைய, விசும்பின் - வானத்தினின்று, உரும் எறிந்து இடிவீழ்ந்து, எங்கும் - எவ்விடத்துமுள்ள, பெரு மலை - பெரிய மலைகளை, தூறு - தொடக்கு (அற), எறிந்தால் அற்று - எறிந்தாற்போலும் எ-று. நானால்: பன்மை குறித்தது; எட்டு எனினும் அமையும் அடுக்குபு வேற்றி: உயிர்வர உகரம் கெடாது நின்றது; 'அடித்தடித்து வக்கரம்' என்புழிப்போல. இயல்திண்டேர் என்புழி இயல் இப் பொருட்டாதலை 'இயறேர்க்குட்டுவன்' என்னும் சிறுபாண் உரையாலறிக. (6) 7. அஞ்சனக் குன்றோய்க்கும் யானை யமருழக்கி இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண் வரிவாரான் மீன்பிறழுங் காவிரி நாடன் பொருநரை யட்ட களத்து. 1 . 'தூவெறிந்து' என்றும் பாடம்.
|