பக்கம் எண் :

15

(ப-ரை.) அதிரா போர்- கலங்குதலில்லாத போரையுடைய, செங்கண்மால்- செங்கட்சோழன், அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கழுமிய - நெருங்கிய, ஞாட்பின் உள் - போரில், மைந்து இகந்தார் - வலியிழந்தவர்கள், இட்ட - போகவிட்ட, ஒழீ முரசம் - ஒழிந்த முரசம், ஒள் குருதி - ஒள்ளிய உதிரத்தில், ஆடி படிந்து, தொழில் மடிந்து - (தம்) தொழிலைத் தவிர்த்து, கண் காணா - (படைகளா லூறுபட்டு) கட்புலனிழந்த, யானை உதைப்ப - யானைகளுதைத்தலால், மங்குல் மழையின் - மேகம்போல, இழும் என அதிரும் - இழுமென முழங்காநிற்கும் எ-று.

முரசம் ஆடிமடிந்து முழங்கும் என வினைமுடிவு செய்க. மங்குல் மழை-'ஒருபொருளிரு சொற்பிரிவில வரையார்' என்பதனால் ஒரு பொருண்மேல் வந்தன. அதிரா-கலங்காத, நடுங்காத, 'அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்' என்பது காண்க. 

(11)

 12. ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந்
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப்
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக்
கூடாரை யட்ட களத்து.

(ப-ரை.) காவிரி நாடான் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கடாஅய் - படையைச் செலுத்தி, கடிதுஆக - விரைந்து, கூடாரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓவா - இடைவிடாது, கணைபாய, அம்புகள் தைக்க, எழில் வேழம் - எழுச்சியையுடைய யானைகள், ஒல்கி தளர்ந்து, தீவாய்- தீயின் நிறம் பொருந்திய, குருதி இழிதலால் உதிரத்தை யொழுக்குதலால், செம்தலை-சிவந்த இடத்தையுடைய, பூவல் குன்றம்-செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற-மழைக்கு எதிர்ந்தன ஒத்தன எ-று.

செம்மண்மலையீற் பெய்த மழை செந்நீராயொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம் மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் செம்மண்; "பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து" என (சிலப்.) வருவது காண்க. அம்-சாரியை.

(12)

 13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்
வரைபுரை யானைக்கை நூற - வரைமேல்
உருமெறி பாம்பிற் புறளுஞ் செருமொய்ம்பிற்
சேஎய்பொரு தட்ட களத்து.