பக்கம் எண் :

11

துறவோர் இதனை, ‘அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுக லான்' என்னும் பொய்யா மொழியா னறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒருவழித் தங்காது திரிந்த இரந்துண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின்கட்டங்கியுண்ணற்பாலரல்ல ரென்க. மந்திரம் இன்னதென்பதனை 'நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப' என்னும் தொல்காப்பியத்தா னறிக. மந்திரம் அமைச்சரது சூழ்ச்சி எனப்பொருள் கோடலும் ஆம்; சூழாது செய்யும் வினை துன்பம் பயக்கு மென்பது கருத்து.

2. பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா1வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு.

(ப-ரை.) பார்ப்பார் - பார்ப்பாருடைய, இல் - மனையில், கோழியும் நாயும், புகல் - நுழைதல், இன்னா - துன்பமாம்; ஆர்த்த - கலியாணஞ் செய்துகொண்ட, மனைவி - மனையாள் அடங்காமை - (கொழுநனுக்கு) அடங்கி நடவாமை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; பாத்துஇல் - பகுப்பு இல்லாத, புடைவை - புடைவையை, உடை - உடுத்தல், இன்னா - துன்பமாம், ஆங்கு அவ்வாறே, உலகு - நாடு, இன்னா - துன்பமாம் எ-று.

பார்ப்பாரில்லிற் கோழியும் நாயும் புகலாகா தென்பதனை ‘மனையுறைகோழியொடு ஞமலி துன்னாது' என்னும் பெரும்பாணாற்றுப்படையடியானு மறிக. ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர் புண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலையுணர்த்திற்று. அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன. பாத்து பகுத்து என்பதன் மரூஉ : ஈண்டுத் தொழிற் பெயர் சிலப்பதிகாரத்தில் ‘பாத்தில் பழம்பொருள்' என வருதலுங் காண்க. புடைவை - ஆடவருடையையும் குறிக்கும். ‘பாத்தில் புடைவையுடையின்னா' என்றதனாற் சொல்லியது ஒன்றுடுத்தலாகாதென்பதாம். ‘ஒன்றம ருடுக்கை' என்னும் பெரும்பாணாற்றடிஒன்றுடாமையே தகுதி யென்பது காட்டி நிற்கின்றது. காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத : ஒரு சொல்லுமாம்.


(பாடம்) 1.உடையின்னாது.