பக்கம் எண் :

13

கெனையகன்று கண்மாறி' என்புழிபோல. இனி, கண்மாறி யென்பதற்கு அரசனிடத் தன்பின்றி எனப்பொருள் கொள்ளலுமாம். கருவிகள் மாறி எனப் பிரித்தல் பொருந்து மேற் கொள்க. பெருவலியார் - பொருள் படை முதலியவற்றாற் பெருவலி யுடையராய அரசரும், தவத்தால் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலுமாம். பெருவலி பெற்றுடையராய முனிவரும் ஆம்; பெருவலியார்க் கின்னா செயல் துன்பந் தரும் என்பதனைக்,‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க், காற்றாதாரின்னாசெயல்' என்னுந் திருவள்ளுவப்பயனாலுமறிக.

5. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர்1பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.

(ப-ரை.) சிறைஇல் - வேலியில்லாத, கரும்பினை - கரும்புப்பயிரை, காத்து ஓம்பல் - பாதுகாத்தல், இன்னா - துன்பமாம்; உறைசேர் - மழைத்துளி ஒழுகுதலையுடைய, பழங்கூரை - பழைய கூரையையுடைய மனையில், சேர்ந்து ஒழுகல் - பொருந்தி வாழ்தல், இன்னா - துன்பமாம்; முறை இன்றி - நீதி யில்லாமல், ஆளும் - ஆளுகின்ற, அரசு - அரசரது ஆட்சி, இன்னா - துன்பமாம்; மறை இன்றி - சூழ்தலில்லாமல், செய்யும், வினை - செய்யுங் கருமம், இன்னா - துன்பந் தருவதாகும் எ-று.

காத்தோம்பல் : ஒரு பொரு ளிருசொல் உறைசேர் பழங்கூரை என்றது செய்கையழிந்து சிதைவுற்று மழைநீர் உள்ளிழியுஞ் சிறு கூரையினை. அரசு - அரசனுமாம் அரசன் முறையிலனாயின் முறையிழத்தலானே யன்றி மழையின்மையாலும் நாடு துன்புறும்;முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி, யொல்லாது வானம் பெயல்' என்பது காண்க. அமைச்சருடன் மறைவிற் செய்யப் படுவதாகலின் சூழ்ச்சி மறையெனப் பட்டது.;

6. அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா2
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.

(ப-ரை.) அறம் மனத்தார் - அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர், கூறும் - சொல்லுகின்ற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும்


(பாடம்) 1. புரைசேர்,

2. கடுமொழியின்னா,