வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலிநெடும் பீலி ' என்னும் நெடுநல்வாடை யடி உரையா னறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினை யுடையது கூந்தல் ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி யென்ப. இங்ஙனம் ஒரோவொருகால் ஒவ்வொருவகையாக வன்றி ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப் படுவது என்று கோடலும் ஆம். படு பழம் - செவ்வியழிந்து விழுந்த பழம் புணர்தல் அன்பால் நெஞ்சு கலத்தல் : மணம் பொருந்துதலும் ஆம். உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்க வல்லார்; பாட்டின் பொருளறிவாரும் ஆம். 15. புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா இல்லாதார் நல்ல விருப்பின்னா1வாங்கின்னா பல்லாரு ணாணப் படல். (ப-ரை.) புல் - புல்லை, ஆர் - உண்கின்ற; புரவி - குதிரையை, மணி இன்றி - மணி யில்லாமல், ஊர்வு - ஏறிச் செலுத்துதல், இன்னா - துன்பமாம்; கல்லார் உரைக்கும் - கல்வியில்லாதார் கூறும், கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; இல்லாதார் - பொருளில்லாதவரது, நல்ல விருப்பு - நல்லவற்றை விரும்பும் விருப்பம், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இன்னா - துன்பமாம் எ-று ஊர்வு : தொழிற்பெயர். பொருள் - பயன், நல்ல - அறம் நுகரப்படுவனவும் ஆம். நாணப்படல் - மானக்கே டெய்துதல்.
16. உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா எண்ணிலான் செய்யுங் கணக்கு. (ப-ரை.) உண்ணாது வைக்கும் - நுகராது வைக்கும், பெரும் பொருள் வைப்பு - பெரிய பொருளின் வைப்பானது, இன்னா துன்பமாம்; நண்ணா - உளம் பொருந்தாத, பகைவர் பகைவரது, புணர்ச்சி - சேர்க்கை, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; கண் இல் ஒருவன் - விழியில்லாத ஒருவனது, வனப்பு - அழகு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, எண் இலான் -
(பாடம்) 1.விழைவின்னா.
|