பக்கம் எண் :

25

கவற்றினால் கவற்றைக்கொண்டு ஆடுகின்ற, சூது - சூதாட்டம், இன்னா - துன்பமாம் எ-று. 

கட்டு - கட்டுப்பாடும் ஆம் உறை : முதனிலைத் தொழிற் பெயர். நட்ட என்றது விருப்புடன் அடிப்பட்டுப் பழகிய என்றபடி கவறு - பாய்ச்சி; ஆவது தாயக்கட்டை, ஒரு சொல் வருவிக்கப்பட்டது.

26. பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல்.

(ப-ரை.) பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - கொண்ட, தொடர் - தொடர்ச்சியை, விடுதல் - விடுவது, இன்னா - துன்பமாம்; அரியவை - செய்தற்கரிய காரியங்களை, செய்தும் - செய்து முடிப்போம், என உரைத்தல்- என்று சொல்லுதல், இன்னா - துன்பமாம்; பரியார்க்கு - (தம்மிடத்தில்) அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் உற்ற - தாம் அடைந்த துன்பங்களைக் கூறும்; கூற்று - சொல், இன்னா - துன்பமாம்; பெரியார்க்கு பெருமையுடையார்க்கு, தீய செயல் - தீயனவற்றைச் செய்தல், இன்னா - துன்பமாம் எ-று.

பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் ‘பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்' என்னுந் திருக்குறளானு மறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களிற் சிறந்த நல்லோர். குற்றியலிகரம் அலகுபெறாதாயிற்று. ‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னா' என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று என்றபடி; தம்மாற் செய்ய வியலாதவற்றைச் செய்து தருவேமெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும் செய்தும் : தன்மைப் பன்மை யெதிர்கால வினைமுற்று; இறந்தகால முற்றும் ஆம். பரிதல் - அன்பு செய்தல் : இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை ‘எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகு வார்' என்னும் வாயுறைவாழ்த் தானுமறிக. உற்ற, தீய என்பன முறையே தெரிநிலையும் குறிப்புமாய வினைப்பெயர்கள்.

27. பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க்1களைந்திடுத லின்னா


(பாடம்) 1. கிழமை யுடையாரை.