பக்கம் எண் :

30

(ப-ரை.) ஒழுக்கம் இலாளர்க்கு - நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே, உறவு உறைத்தல் - தமக்கு உறவுளதாகக் கூறுதல், இன்னா - துன்பமாம்; விழுத்தகு நூலும் - சீரிய நூலும், விழையாதார்க்கு - விரும்பிக் கல்லாதார்க்கு, இன்னா - துன்பமாம்; இழித்த தொழிலவர் - இழிக்கப்பட்ட தொழிலை யுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம்; கழிப்பு வாய் - நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய, மண்டிலம் - நாட்டிலே, கொட்பு - திரிதல். இன்னா - துன்பமாம் எ-று.

ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் என்னும் பாடத்திற்கு ஒழுக்கமில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்க. இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில் ஈற்றடிக்கு, ஒழுகக் குறைத்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம்.

35. எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய1மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல்.

(ப-ரை.) எழிலி - மேகமானது, உறை நீங்கின் - நீரைச் சொரியாதாயின், ஈண்டையார்க்கு - இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு, இன்னா - துன்பமாம்; குழலின் இனிய - புல்லாங் குழலைப்போலும் இனிய, மரத்து ஓசை - மரத்தினது ஓசை, நன்கு இன்னா மிகவுந் துன்பமாம்; குழவிகள் உற்ற - குழந்தைகள் அடைந்த, பிணி - நோயானது, இன்னா - துன்பமாம்; அழகு உடையான் - அழகினையுடையவன், பேதை எனல் - அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல், இன்னா - துன்பமாம் எ-று.

உறை - நீர்த்துளி, ‘குழலினினிய மரத் தோசைநன்கின்னா' என்பதன் கருத்து [காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களினின் றெழும் ஓசை குழலிசைபோ லினியதாயினும் பாராட்டப்படுவதின்று என்பது போலும்] குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள் கூறிக்கொள்க.

36. பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை ன்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு
.


(பாடம்) 1. குழலினிய