பக்கம் எண் :

12

கொல் - நம்மிடத்தில் வந்து கூடிக்கலந்து செல்லும் இன்பத்தை வெறுத்தானோ? வெறுத்திலனோ? யானறியேன். (என்று தலைவி தோழியிடங் கூறினள்.)

(வி-ம்.) காந்தள் என்பது மலரையுணர்த்தியது. புகை என்பது நெருப்பிணையுணர்த்தியது. காந்தட் பூக்கள் பல நெருக்கமாக மலர்ந்திருந்தால் அது தீயெரிவது போலத்தோன்றும். யானைகள் தீக்கு மிகவும் அஞ்சும். யானைகள் வராமல் தடுப்பதற்கு மலையில் வாழ்வோர் பரண்கட்டி அதன்மேற் படுத்துச் சுற்றிலும் மரக்கட்டைகளைப் போட்டுத் தீ மூட்டிவிடுவர். இரவு முழுவதும் எரியும். அது கண்டு, நெருப்புத் தோன்றும் இடத்திற்கு யானை வராது. யானைகளின் இயற்கை நெருப்பைக்கண்டு அஞ்சுவது. யானை அஞ்சி ஓடும்போது துதிக்கையை இரு கொம்புகட்கும் நடுவில் நிமிர்த்திக்கொண்டே செல்வதும் இயற்கை. இதனையறிந்து கவிஞர் இவ்வாறு கூறினர் என்றுணர்க. யானைகள் வீறிட்டோடுவது கண்டார்க்கு அச்சந்தரும் ஆதலாற் ‘’பயமலை’’ என்றார். பயம்-பயன் என்று பொருள் கொண்டு பலவகைப் பயன்களையும் மக்கட்குத் தரும் மலை என்றுங் கூறலாம். யானை ஓடும் இயற்கையுடைய மலை, பயந்தருமலை என்று தனித்தனி கூட்டுக. யானை காந்தள் மலரைக்கண்டு தீயென மருண்டு வெருண்டோடுவது போல அந்நாட்டுத் தலைவனும் நம்மைத் தீயோர்கள் எனக்கருதி வெருண்டு ஓடிமறைந்தான் போலும் என உள்ளுறை கொள்க. பிரிந்துசென்ற காதலன் வராததால் வெறுத்தானோ? வெறுத்திலனோ என்று ஐயமுறுகின்றேன். உன்கருத்து யாது எனக்கேட்பாள் போல வினவினள். தோழியிடம் கூறியது தன்துயரத்தை மாற்றுவள் என்று கருதியேயாம்.

(இ-பு.) காந்தள் : பொருளாகுபெயர். புகை : சினையாகுபெயர். அரும்புகை - பண்புத்தொகை. இனம் - இனன் இறுதிப்போலி. நங்கண் - கண் ஏழனுருபு. கொல் : ஐயப்பொருளில் வந்த இடைச்சொல். கலப்பு - கூடல். இது பு விகுதிபெற்ற தொழிற் பெயர். கலப்பு இறுதிதொக்க இரண்டாம் வேற்றுமை. நாடன் நங்கட் கலப்பு காய்ந்தான் கொல் எனக் கூட்டுக.