இடங்கள் மென்மையாக இருக்கும். பகலில் அதனைக் கண்ட மயில்கள் அவ்விடத்தினை விரும்பிக் கால்களாற் கிளைத்துத் தங்கியிருக்கும். இது மயில்களின் இயற்கை. பொறி - புள்ளி மயிலுக்குச் சிறகுகளிற் கண்போலப் புள்ளி பரந்து தோன்றும்; அதுகுறித்து ‘’பொறிகிளர் மஞ்ஞை’’ என்றார். முறிகிளர் என்றது இலைகள் செறிந்தது என்பதையுணர்த்திற்று. முறி என்பது ஆகுபெயராய் மரங்களை யுணர்த்தியதெனக் கொள்ளினும் அமையும். அரிதுஎன்பது அவன் வரவு மிகவும் அருமையானது எனவும், பேசுஞ்சொல் அருமையானது எனவும் இருவகையாகவும் பொருள்கொள்ளலாம். இரவு வரவு ஏதமுடைத்து; இதனை நீக்குவதற்குரிய சூழ்ச்சி ஆய்க என்பது கருத்து. பன்றி குத்திக் கிளறியெழுப்பிய புழுதியின் அருமையறியாது மயில் விரும்பிக் குடைவதுபோல அவன் இரவில் வரும் வழி அருமையை யறியாமல் நான் அவனோடு கூடியின்பம் நுகர்கின்றேன் எனக் குறிப்பாற் கூறி வெறுத்தனள் என உள்ளுறை கொள்க. (இ-பு.) எறிகிளர் என்ற முதனிலைகள் பெயரெச்சப் பொருளைத் தந்தன. பொறிகிளர்: எழுவாய்த் தொடர். முறிகிளர் என்பது மது. வரும்: செய்யும் என்னும் முற்று. அரிது: ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். நன்மலை: பண்புத்தொகை. கிளைத்திட்ட பூழி: பெயரெச்சத் தொடர். இதுவு மது 12. நாக நறுமலர் நாள்வேங்கைப் பூவிரவிக் கேச மணிந்த கிளரெழிலோ ளாக முடியுங்கொ லென்று முனிவா னொருவன் வடிவேல்கை யேந்தி வரும். (சொ-ள்.) நாகம் நறுமலர் நாள் வேங்கைப்பூ விரவி - புன்னையின் நல்ல மலரையும் அன்றலர்ந்த வேங்கைப் பூவினையும் கலந்து; கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆகம் - கூந்தலிற் புனைந்து விளங்கிய வனப்புடையோளாகிய நம் தலைவியின் உடலானது; முடியும் கொல் என்று - அழிந்து விடுமோ என்று
|