ஐயங்கொண்டு; ஒருவன் முனிவான் வடிவேல் கை ஏந்தி வரும் - நம் தலைவனாகிய ஒப்பற்றவன் தன் உயிர் வாழ்க்கையை வெறுத்துக் கூர்மையான வேலைக் கையிற்றாங்கி இரவில் வருவான். (ஆதலால் இவ்வரவையானஞ்சுகின்றேன் விலக்கு என்றாள்). (வி-ம்.) புன்னை மலரும் வேங்கை மலரும் விரவிப்புனைந்த கூந்தலுடைய ‘’எழிலோள்’’ என்றனள் தலைவி. இது தன்னைப் படரக்கையாகக் கூறியது. நான் பிரிவாற்றாமையாலிறந்து படுவேன் என்று கருதி இரவில் தனியாக வருகின்றான் தலைவன் எனக் கூறினள். என்னாக முடியுங்கொல் என்று கருதித் தன்னுயிரை வெறுத்து வருகின்றான் என்பதை விளக்க ‘’முனிவான் ஒருவன் வரும்’’ என்றாள். கொடிய விலங்கினங்களும், அரவும் பேயும் வழங்கும் ஆற்றிடையும் கான்யாற்றினிடையும் ஏற்றிழிவுடை நெறியினும் இரவில் வருவது தன்னுயிரை வெறுத்தவர்க்கே தகுதியாம் என்பது தோன்றக் கூறியது இது. இவ்வாறு வந்து என்னுயிரைப் புரக்கின்றான்; என்னுயிரோ அவனுயிராக இருக்கின்றது; இதனைநீ குறியாது இரவில் வருக எனக்கூறினை; எனத்தோழிக்குக் குறிப்பாலறிவித்தது இது. புன்னைமலரும் வேங்கைமலரும்புனைந்த கூந்தல் என்றது முன் தழையுங் கண்ணியும் கொண்டு வந்த போது புன்னை மலரையும் தலைவன் கூந்தலிற் புனைந்தது குறித்துத் கூறியது. வேங்கைமலர் மலைநாட்டு வாழ்வார்க்குரியது; அம்மலரைப் புனைவது அம்மகளிரியல்பு. புன்னை நெய்தற்குரியது. வேங்கை குறிஞ்சிக்குரியது. இவ்விரண்டும் புனைந்த எழிலோள் என்றது நெய்தற்குரிய இரங்கலும் குறிஞ்சிக்குரிய புணர்தலும் என்னுள்ளத்தில் விரவியிருக்கின்றது எனக் குறிப்புணர்த்தியவாறு எனவும் கொள்க. (இ-பு.) நறுமலர்: பண்புத்தொகை. நாள் என்பது இலக்கணை. புதுமையை யுணர்த்தியது. எழிலோள் - தன்மை படர்க்கையாகக் கூறிய வழுவமைதி. செறலிற் கூறியது. கொல் ஐயப் பொருளில் வந்தது. முனிவான்: முற்றெச்சம். முனிவு + ஆன் எனப்பிரித்து மூன்றனுருபாக்கி உடனிகழ்ச்சிப் பொருளில் வந்ததாகக் கொள்ளினும் அமையும்.
|