2. பாலை வரைபொருட் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத்தலைவியின் பிரிவாற்றாமை கூறல். 13. கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும் நெடுவிடை யத்தஞ் செலவுரைப்பக் கேட்டே வடுவிடை மெல்கின கண். (சொ-ள்.) கடுகி அதர் அலைக்கும் கல்சூழ் பதுக்கை - விரைந்து வழியில் வருவோரை அடித்துப் பொருள் பறிக்கின்ற பரற்கற்கள் சூழ்ந்த கரும்பாறைகளில் இருந்து, விடுவில் எயினர் தம் வீளை ஓர்த்து நெடுவிடை ஓடும் அத்தம் - அம்பேவுகின்ற விற் பிடித்த வேடர்களுடைய சீழ்க்கையடிக்குங் குரலைக் கேட்டு நீண்ட மரையான் ஏறுகள் அஞ்சியோடு கின்ற பாலை வனத்தின் வழி; செலவு உரைப்ப கேட்டு - நீ செல்லக்கருது கின்றாய் என்பது நான் சொல்லக் கேட்டவுடனே; வடு இடைகண் மெல்கின - மாவடுப்போன்ற கண்களிடையே கண்ணீர் மெதுவாக வழிந்தன. (ஆதலால் நீ பிரிந்து செல்லல் தகவன்று என்று குறிப்பிற் கூறினள்.) (வி-ம்.) ஆறலைக்கும் வேடர் பல் வேறிடங்களிற் பதுங்கி யிருந்து வீளையொலி கேட்டவுடன் விரைந்து வந்து கூடி வழிப்பறி செய்வர் என்பது தோன்ற ‘’கடுகி அதர் அலைக்கும்’’ என்றார். பதுக்கை பதுங்கியிருப்பதற்குத் தக்கபாறை. பதுங்கத் தக்க புதர்களையும் பதுக்கை எனக்கூறலாம். கல்சூழ் என்பது பெரிதும் சிறிது மாகக்கிடக்கும் பரல்களை யுணர்த்தியது. கல் என்பதற்குப் பாறை எனப்பொருள் கொண்டு பலபாறைகள் சூழ்ந்த பதுங்கும் இடம், என்பதும் அமையும். வீளை - சீழ்க்கை; இது வழியில் வருவோரைக் கண்டு பல் வேறிடங்களிற் பதுங்கியிருக்கும் வேடர்கள் வந்து தன்னுடன் கூடுவதற்காக ஒருவன் கைவிரல்களை வாயில் வைத்துப் பேரொலி செய்தல், இதனைச் சீழ்க்கையடித்தல் என்பர். விடை - எருது. இது காட்டுப்பசுவின்
|