பக்கம் எண் :

2

சேர்ந்தான், தினைப்புனத்தின்கண் வந்து சேர்ந்தான் எனக் கொள்க. பகற்குறியிற் பல இடங்களில் வந்து கலந்திருப்பன் ஆதலால் ‘’ஏனல், சாரல்’’ என்றார். சாரலிலுள்ள ஏனலில் எனினும் ஏனல்களையுடைய சாரலில் எனினும் பொருந்தும். என்னையறியாதே என்மேனி பசந்து சிதையும் என்று வியப்பாகக் கூறினள் எனக் கொள்க. என்று என்பது என்று அறிந்து என்ற பொருளைத் தந்தது.

(இ-பு.) கடியேனல்; அமர் சாரல்: வினைத்தொகைகள். கிளி கடி: இரண்டாம் வேற்றுமைத் தொகை. கலந்தான்: வினைமுற்று. இலன்; குறிப்பு வினைமுற்று. மடமான்: பண்புத்தொகை.

இதுவு மது

2. வெந்த புனத்துக்கு வாசமுடைத்தாகச்
சந்தன மேந்தி யருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலைநாடன் வாரான்கொ றோழியென்
னெஞ்ச நடுங்கி வரும்.

(சொ-ள்.) தோழி - என்பாங்கியே!; வெந்த புனத்துக்கு வாசம் உடைத்து ஆக - நெருப்பால் வெந்து கருகிய காட்டிற்கு மணம் உண்டாகும்படி; அருவி சந்தனம் ஏந்தி கொணர்ந்து இடூஉம் - மலையினின்று வரும் அருவியானது சந்தனக் கட்டைகளை ஏந்திக்கொண்டு வந்து போடுகின்ற; வஞ்ச மலைநாடன் - வஞ்சகமுள்ள மலைநாட்டுத் தலைவன்; வாரான்கொல் - இனிவாரானோ, வருவனோ யான் அறியேன்; என் நெஞ்சம் நடுங்கிவரும். எனது மனம் அது குறித்து நடுங்கி வருகின்றது; (என்று கூறினள் தலைவி).

(வி-ம்.) ‘’வெந்த புனம்’’ எனவே முன் அகிலும் சந்தனமும் வளர்ந்திருந்தன. மணமுடையதாயிருந்தது. அம்மரங்களையெல்லாம் வெட்டித் தீயினாற் சுட்டுத் தினை விதைத்த புனம் என்பது குறிப்பால் தோன்றியது. சுட்டெரித்ததனால் மணமின்றி இருந்தது எனவும் அப்புனத்துக்கு மணமுண்டாக்கக் கருதி அருவி சந்தன மரத்துண்டுகளைக் கொண்டு வந்து