பக்கம் எண் :

20

மாண்பு இல்வெஞ் சுரம் சென்றார் வர கண்டு. பெருமையில்லாத கொடிய பாலை நிலத்துப் பிரிந்து சென்ற நம் தலைவர் வரவினை யறிந்து; வாய் மாண்ட பல்லி படும் - குறி கூறுவதால் பெருமை பொருந்திய வாயையுடைய பல்லியொலிக்கின்றது. (ஆதலால் நம் தலைவர் இன்னேவருவர், வருந்தாதே எனத்தோழி கூறினள்)

(வி-ம்.) காட்டுப் பசுக்கள் கன்றுடனும் ஏற்றுடனும் கூடியெங்கும் திரிவதால் அவற்றின் மிகுந்த மலை என்பது தோன்ற ‘’ஆமா சிலைக்கும் மணிவரை’’ என்றார். மறவர்களேயன்றி வேறு எவறும் செல்வதற்குத் தக்கவழி அன்று என்பது விளங்க ‘’ஆரிடை’’ என்றார். ஆர் இடை - அரிய வழி; கொடிய வழிஎன்பது. வேடர்கள் ஒவ்வொரு நாளும் வனவிலங்குகளைக் கொன்று தின்பதற்காக வில்லையும் அம்பையும் கையிற் கொண்டு காட்டிற் செல்வது வழக்கம். கண்ணிற் புலப்பட்ட விலங்கின்மேல் அம்பேவிக் கொல்வதும் அவர் இயல்பு. இதனைப் பல நாளும் அறிந்த விலங்கினங்கள் வேடர் வரவு கண்டால் அஞ்சியோடும்; ஆதலால் அதனை ‘’மாண்பில் வெஞ்சுரம்’’ என்றார். மக்கள் செல்வதற்குத் தகுதியில்லாத சுரம் என்பது கருத்து. வெஞ்சுரம் ஆரிடை சென்றார் எனக்கூட்டுக. அரிய சுரத்தின் வழிச்சென்றமை குறித்து நாம் வருந்துவோம் என்பதை யறிவார்; விரைந்து வருவார் என்று கூறினேன். நீ பின்னும் ஆற்றாமல் வருந்தினை; இப்போது பல்லி இடப்பக்கம் சொல்லுகின்றது; அது அவர் இடைவழியில் வருவது தெரிந்தே கூறுகின்றது. ஆதலால் ஆற்றியிரு என்று வற்புறுத்தினள் எனக்கொள்க.

(இ-பு.) அருமை + இடை - ஆரிடை பண்புத்தொகை. வெம்மை + சுரம் - வெஞ்சுரம், இதுவும் அது. மாண்சிலை என்பது வினைத்தொகை; பண்புத்தொகை எனக்கொள்ளினும் பொருந்தும். சென்றார்: வினையால ணையும் பெயர்; படும்: செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. வர, கண்டு, பல்லிபடும் எனக்கூட்டுக. தாம்: அசை.