நோயின் கொடுமை உனக்கும் தோன்றும் என்று குறிப்பால் அறிவித்ததாம். ஆந்தைகள் இரவில் மரப்பொந்துகளிற் சென்று தங்கும். பகலில் வெயில் ஏற ஏற அப் பொந்தும் வெந்து சுடும். அப்போது வெளியேற முடியாமலும் உள்ளிருக்க முடியாமலும் வருந்திக் கீச்சுக் கீச்சு என்று சிறிய ஒலியுடன் கத்தும். அத்தகைய கொடியகானம் என்றார். அக்கானத்தின் கொடுமையை நினைத்து என் நெஞ்சும் அவர் சென்ற வழியே சென்றது. துயர்க் கடலில் நீந்துகின்றது; அக்கடலை விட்டுக் கரையேற முடியாது வருந்துகின்றது; நீ ஆற்றியிரு என்று தேற்றவுரை கூறுகின்றாய்; எங்ஙனம் ஆற்றுவேன் என்ற குறிப்புத் தோன்ற ‘’என் நெஞ்சு நீந்தும்’’ என்றாள். தலைவர் பிரிவு ஆற்றும் வலிமையில்லேன் என்பது கருத்து. (இ-பு.) கலி - ஒலி, குறுமை + கலி - குறுங்கலி - சிறிய ஒலி இது பண்புத்தொகை. தெறூஉம் - இசை நிறை யளபெடை. ஈரம் + எயிறு என்பது அம் குறைந்து ஈர் என்று புணர்ந்தது. நெடுமை + இடை = நெடுவிடை பண்புத்தெகை.
பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது 22. கள்வர் திரிதரூஉங் கானங் கடந்தவர் உள்ளம் பிரிந்தமை நீயறிதி - ஒள்ளிழாய் தொல்லை விடரக நீந்திப் பெயர்ந்தவர் வல்லைநாங் காணும் வரவு. (சொ-ள்.) ஒள் இழாய் - ஒளிபொருந்திய நகைகளையணிந்த தலைவியே!; கள்வர் திரிதரும் கானங் கடந்தவர் - ஆறலை கள்வர் நீங்காது திரியும் காட்டு வழியாகப் பிரிந்து சென்றவருடைய; உள்ளம் பிரிந்தமை நீ அறிதி - மனமும் பிரிந்ததற்குரிய காரணமும் நீயறிவாய் (யான் கூற வேண்டுவதின்று); தொல்லை விடரகம் நீந்தி பெயர்ந்து - பழமையான மலைகளைக் கடந்து மீண்டு வரும்; அவர் வரவு வல்லை நாம் காணும் - அவர் வரவினை விரைவில் நாம் காண்போம்; (வருந்தாதே என்று வற்புறுத்தினாள்).
|