பக்கம் எண் :

24

(வி-ம்.) உள்ளமும் பிரிந்தமையும் என உம்மை விரித்துக் கொள்க. அவர் உள்ளம் உன்னைவிட்டுப் பிரியாமலேயிருக்கும் என்பதும் அவர் உடலே பிரிந்து சென்றது என்பதும் நீயறிவாய், பொருளின்றி இல்லறம் நடத்துவது இயலாது; பொருளே அறம் புரிவதற்கும் இன்பம் துய்ப்பதற்கும் இன்றியமையாதது என்று ஆய்ந்து பொருளீட்டிவருவது குறித்தே பிரிந்தார் என்பதும் நீயறிவாய். யானும் அறிவேன் என்ற கருத்து விளங்க ‘’உள்ளம் பிரிந்தமை நீயறிதி’’ என்றார். விடரகம் என்பது குகைகளைத் தன்னிடத்தேயுடையது என்ற காரணத்தால் மலைக்குப் பெயராயிற்று. பல மலைகளில் ஏறியும் இறங்கியும் வருவது நீரில் நீந்திக் கரையேறுவது போன்ற துயரம் தருவது ஆதலால் ‘’நீந்தி’’ என்றார். காணுதும் என்பது காணும் எனக் குறைந்து நின்றதாகக் கொள்க. அன்புள்ள முடையவர் ஆதலால் அவர் வரவை விரைவிற் காண்போம் எனத் துணிவு கூறினள் எனக் கொள்க.

(இ-பு.) ஒள்ளிழை: பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி. இது ஈறறில் ஐ ஆய் ஆகி விளியாயிற்று. திரிதரூஉம்: இன்னிசை யளபெடை. அறிதி: முன்னிலை யொருமை வினை முற்று. காணும் - தொகுத்தல் விகாரம்.

ஆற்றாமை யறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.

23. சிலையொலி வெங்கணையர் சிந்தியா நெஞ்சிற்
கொலைபுரி வில்லொடு கூற்றுப்போ லோடும்
இலையொலி வெங்கானத் திப்பருவஞ் சென்றார்
தொலைவிலர்கொ றோழி நமர்.

(சொ-ள்.) சிலைஒலி வெங்கணையர் - வில்லின் நாணொலியும், கொடிய கணைகளையும் உடைய வேடர்கள்; சிந்தியா நெஞ்சில் - அறம் பாவம் என்ற ஆராய்ச்சியில்லாத மனத்துடன்; கொலை புரி வில்லொடு கூற்றுபோல் ஓடும் - கொல்லத்தகுந்த வில்லுடன் இயமனைப்போல வழிச்செல்வோரைத் தொடர்ந்து விரைந்து செல்லும் இயல்புடைய; இலைஒலி வெங்கானத்து - இலைகள்