உலர்ந்து கலகலவென்று ஒலிசெய்யும் கொடிய கானகத்து வழியாக; இப்பருவம் சென்றார் - இவ்வேனிற் காலத்தே பிரிந்து சென்றவராகிய; நமர் தொலைவிலர் கொல் - நம் தலைவர் தளர் வில்லாதவரா யிருப்பரோ? தோழி - பாங்கியே (நீ கூறுக என்றாள்) (வி-ம்.) வில்லின் நாணொலி செய்வதும் கணையைக் கையில் வைத்திருப்பதும் மறவர் இயற்கையாதலால் ‘’சிலையொலி வெங்கணையர்’’ என்றார். தன்னுயிர்போல மன்னுயிரையும் கருதினால் பிறவுயிர்க்குத் துன்பம் விளைக்கவும் அழிக்கவும் எண்ணார்; அவ்வாறு கருதாது கொலை செய்வதும் பிறரைத் துன்புறுத்தலும் பிறர் பொருளைப் பறித்தலும் தொழிலாகக் கொண்டவர் என்பது விளங்க ‘’சிந்தியா நெஞ்சிற் கொலைபுரி’’ என்றார். கள்வர், வழிச்செல்வோரைத் தொடர்வது, கூற்றுவன் கொல்வதற்குப் பின்றொடர்வதுபோலத் தோன்றும் என்பார் ‘’கூற்றுப்போல்’’ என்றார். பச்சையிலையாகத் தழைத்துத்தளிர்த்திருந்தால் அவ்விலைகள் ஒன்றோடொன்று மோதக் காற்றால் அலைக்கப்படினும் ஒலி தோன்றாது. காய்ந்து சருகாயிருப்பின் காற்றுப் பட்டவுடன் சலசல, கலகலவென ஒலிப்பதியற்கை. ஆதலால் ‘’இலையொலி’’ என்றார். ஒலித்தல் - தழைத்தல் என்ற பொருளைத்தருமேனும் வெங்கானம் என்றகுறிப்பால் ஒலி ஓசையெனப் பொருள்பட்டது. தலைவர் தளர்விலரோ என்ற குறிப்பு அவர் தளர்விலரெனின் யானும் தளர்வின்றி ஆற்றியிருப்பேன் என்பதை விளக்கிற்று. (இ-பு.) சிந்தியா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். கொல்; ஐயப்பொருளைத் தந்தது. ஒலி கானம், வெங்கானம் எனக் கூட்டுக. ஒலிகானம்: வினைத்தொகை. வெங்கானம்: பண்புத்தொகை. இதுவும் அது 24. வெஞ்சுரம் தேரோட வெஃகிநின் றத்தமாச் சிந்தையா னீரென்று செத்துத் தவாவோடும் பண்பி லருஞ்சுர மென்பவா லாய்தொடி நண்பிலார் சென்ற நெறி.
|