(சொ-ள்.) ஆய்தொடி - ஆராய்ந்த வளையலையணிந்த பாங்கியே! வெஞ்சுரம் தேர்ஓட - கொடிய பாலைவனங்களில் பேய்த்தேர் தோன்ற; அத்தம் மா - அச்சுரத்தில் உள்ள மான்கள் வெஃகி நின்று - விரும்பி நோக்கி நின்று; சிந்தையால் நீர் என்று செத்து - மனத்தால் நீர் என்று கருதி; தவா ஓடும் பண்பு இல் அருஞ்சுரம் - நீங்காமல் ஓடித் திரியும் பயனில்லாத கொடிய வனமே; நண்பிலார் சென்ற நெறி - நம் மேல் நண்பு இல்லாத தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற வழியாகும்; என்ப - என்று பலரும் சொல்வர். (அது குறித்து தான் வருந்துகின்றேன் பிரிவாற்றாமையா லன்று என்றாள்.) (வி-ம்.) பிரிவாற்றியிருப்பேன்; ஆயினும் அவர் சென்ற வழயை நினைத்த போதுதான் கவலை தோன்றுகின்றது என்றாள். தேர் ஓடுதல் - பேய்த்தேர் தோன்றுதல்; கானல் பரந்து தோன்றுதல். கானலைப் பேய்த்தேர், வெண்டேர், என்று கூறுவர் புலவர். கானல் என்பது சூரிய வெப்பத்தால் காட்டில் எங்கும் வெண்மையாக நீர்போலப் பரந்து தோன்றும் ஒருவகைக் காட்சி, கண்ணுக்கு நீர் போலத் தோன்றுவதால் அதனை மான்கள் உண்மையான நீரென்று கருதியலைவது இயற்கை. ‘’கானலை நீரென் றெண்ணிக் கடுவெளி திரியு மான்போல்’’ என்றார் பிறரும். பருகுவதற்கு நீரும் இல்லாத வழி என்றால் வேறு என்ன அக்கானில் இருக்கும். ஒரு வகையாலும் பயன்படாத வழி என்பது தோன்ற ‘’பண்பில் அருஞ்சுரம்’’ என்றார். மக்கட் பண்பில்லையெனில் அவர் பண்பில்லாதவர் என்று கூறுவது போல நிலத்திற்குரிய பண்பில்லாதது அது என்று கொள்க. நீரும் நிழலும் இல்லாத பாலை வழிச்சென்றவர் எவ்வாறு வருந்துவாரோ என்று கருதித்தான் கவலையுறுகின்றேன் என்று தோழியிடம் மறைத்துக் கூறினள். (இ-பு.) ஆய்தொடி: அன்மொழித்தொகை. தேர் என்பது குறிப்புச்சொல். என்ப: பலர்பாற் படர்க்கை வினைமுற்று. ஆல் - அசை. நண்பிலார்: குறிப்பு வினையாலணையும் பெயர்.
|