பக்கம் எண் :

27

3. முல்லை

பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவங் காட்டி
வருவர் எனத் தோழிவற்புறுத்தியது.

25. கார் செய் புறவிற் கவினிக் கொடிமுல்லை
கூரெயி றீனக் குருந்தரும்ப - வோரும்
வருவர்நங் காதலர் வாட்டடங் கண்ணாய்
பருவரல் பைதனோய் கொண்டு.

(சொ-ள்.) வாள் தடம் கண்ணாய் - வாளாயுதம் போன்ற கூநிய அகன்ற விழிகளையுடையாய்! கார் செய் புறவில் - மேகம் மழை பெய்த முல்லை நிலங்களில்; கொடிமுல்லை கவினி - முல்லைக் கொடி செழித்து அழகு பெற்று; கூர் எயிறு ஈன, கூர்மையான பற்கள் போன்ற அரும்பைக் காட்டவும், குருந்து அரும்ப - குருந்த மரங்களும் அரும்பைத் தோற்றுவிக்கவும்; நம் காதலர் வருவர் - நம்முடைய காதலர் வருவார்; பைதல் நோய் கொண்டு பருவரல் - பசலைநோய் கொண்டு வருந்தாதே (வருவர் என்று தேற்றினாள்).

(வி-ம்.) வாள்கண்ணாய், தடம் கண்ணாய் எனத்தனித்தனி கூட்டுக. கார் என்பது மேகத்தை யுணர்த்தியது. ஆகுபெயர். கார்செய்யுந் தொழில் மழை பெய்தல் ஆதலின் செய் என்பதற்கு அத்தொழிலைச் செய்த எனப்பொருள் கூறப்பட்டது. கொடிமுல்லை முன் பின்னாக மாற்றிப் பொருள் கொள்க. எயிறு - பல். இது உவமையாகு பெயராய் முல்லையரும்பினை யுணர்த்தியது. நம் காதலர் வருவர் பைதல் நோய் கொண்டு பருவரல் எனக்கூட்டிப் பொருள் கொள்க. முல்லை நிலத்தில் மழை பெய்து செழித்து முல்லைக் கொடி யரும்பீன்றது குருந்தும் அரும்பு அரும்பியது கார்முந்து முன் என் தேர் முந்தும் என்று கூறிச்சென்றவர் காதலர் ஆதலால் விரைவில் வருவர் அது குறித்து வருந்தாதே என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறியதாகக் கொள்க. ஈன, அரும்ப என்ற செயவெனெச்சம் இது நிகழா நிற்க இது நிகழும் என்னும் பொருளில் நின்றன.