பிடவஞ்செடியில் ஏறிப்போர்புரியத் தொடங்கிய போது நெருப்புப்போலத் தோன்றியது. அஞ்சியோடிற்று அச்சேவல். இவ்வாறு சேவல் கண்டு தீ என்று வெருளும்படி செங்காந்தள் குலை குலையாகப் பூத்து நிற்கின்றன. ஆதலாற் கார் காலம் வந்தது தலைவரும் வருவார் நீ வருந்தாதே என ஆற்றினள் தோழி எனக்கொள்க. வாரா விடல் - வாராதிருத்தல் என்ற பொருளைத் தந்தது. அரிது என்பது இல்லை என்ற பொருளில் வந்தது. வாராமல் இருப்பதில்லை எனவே வருவர் என்பது குறிப்பாயிற்று. கோழிச் சேவலின் இயற்கை ஒரு சேவலைக் கண்டால் உடனே அதனோடு போர் புரியத் தொடங்குவது. காந்தட்செடி மேலுள்ள பூக்களின் தோற்றம், சேவலின் உச்சியிற்கொண்டைப் பூவைப்போலத் தோன்றியவுடன் மாறுபட்ட சேவல் என எண்ணி அடுத்துள்ள பிடவில் ஏறிப் போர்செய்ய எண்ணி நோக்கியபோது தீயாகத் தோன்றியது; உடனே வெருண்டோடியது என்று விளக்கங் காண்க. பொன் - திருமகள் போன்ற; ஏர் நிறத்தாய் - அழகிய வடிவமுள்ளாய் எனக் கூறினும் பொருந்தும். (இ-பு.) குருதிமலர்: உவமைத்தொகை, கூர்முகை, பொருதீ, வினைத்தொகைகள். நிறத்தாள் நிறத்தாய் என விளியாயிற்று. வாரா ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். விடல்: தொழிற் பெயர். அரிது: ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று. 27. ....... ....... ...... ......... ............யொல்கப் புகுதரு கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி யூர்தரு மேனி பசப்பு. (சொ-ள்.) ஒல்க - தளர்ச்சியாக; புகுதரும் - நுழைகின்ற; கார் தருமாலை - மழைபெய்யுமாலைக்காலத்தில், கலந்தார் வரவு உள்ளி - என்னை யணைந்த காதலர் வருவர் என்பதை நினைந்து; மேனி பசப்பு ஊர் தரும் - என் மேனியிற் பசலை பரவுகின்றது.
|