போடும் எனவும் கற்பித்தார். இயற்கையாக அருவி சந்தனம் கொண்டு வருவதை மணமுண்டாக்கக் கருதி எனக் கற்பித்தனர். அன்றியும் வஞ்சம் உடையது என்றார். வஞ்சம் என்பது ஒருவரும் அறியாமல் ஒரு செயலைச் செய்வது. புனத்திற்கு மணமில்லை யென்பதை மனத்துட்கொண்டு, புனத்திற்குங் கூறாமல், ஒருவர்க்குந் தெரியாமற் சந்தனக் கட்டைகளை இழுத்துக்கொண்டு வந்து போட்டது அருவியின் செயல்; ஆதலால் அச்செயல் வஞ்சம் எனக் கூறினர். மலைநாடு வஞ்சகச் செயலுடையது. அது போலவே அந்நாட்டுத் தலைவனும் இருப்பான் போலும் எனத் தலைவி தோழிக்குக் கூறினள். வெந்த புனம்போன்ற எனக்கு அருவிபோல வரைபொரு ளீட்டிவந்து மணந்தருவான் என்று எண்ணுவதைக் குறிப்பாலுணர்த்தினள் என்று அறிக. வந்து மணம் புரிவான் என்று துணிகின்றேன்; ஆயினும் என்நெஞ்சம் நடுங்குகின்றது; அதற்குக் காரணம் என்ன என்று வினவினள் எனவும் கொள்க. இதனால் தன் மனத்துயரத்தையும் துணிவையும் தோழிக்குத் தலைவி கூறினள் என்க. (இ-பு.) இடூஉம்: என்பது இன்னிசையளபெடை. கொல். ஐயப் பொருளில் வந்தது. இடூஉம் நாடன் எனக் கூட்டுக. இடூஉம்: செய்யும் என் வாய்பாட்டுப் பெயரெச்சம். கொணர்ந்து: செய்து என்வாய்பாட்டு வினையெச்சம். வஞ்சம் மலை நாடன்: இரண்டனுருபும் பயனும் தொக்க தொகை. வெந்த: செய்த என்வாய்பாட்டுப் பெயரெச்சம். இதுவு மது 3. பாசிப் பசுஞ்சுனைப் பாங்க ரழிமுது நீர் காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும் பாசம்பட் டோடும் படுகன் மலைநாடற் காசையிற் றேம்புமென் னெஞ்சு. (சொ-ள்.) பாசி பசு சுனை பாங்கர் அழி முது நீர் - பாசம் படர்ந்த பசுமையான நீர்ச் சுனையின் பக்கத்தில் வழியும் பழமையான நீரில்; காய் சினம் மந்தி பயின்று கனி சுவைக்கும் - மிகுந்த சினமுடைய மந்திகள் பழகி அந்நீரில் வருங் கனிகளையெடுத்துத்
|