பக்கம் எண் :

35

நிலத்தலைவனே! நயம் இலேம் - ஆடல் பாடல் அழகு முதலிய நலங்கள் இல்லோம் நாம்; எம்மனை இன்றோடு வாரல் - எமது மனைக்கு இந்நாள் நின்று வாரற்க, இளமுலையார் தோள் நயந்து துயிலின் வாழ்க - இளமையான கொங்கையுடையார் தோளிலணையும் இன்பத்தை நுகர்ந்து துயின்று வாழ்வாய் (என்று புலந்து கூறினள் தலைவி)

(வி-ம்.) ‘’கயலினம் பாயுங் கழனி நல்லூர’’ என்றது வயலிற் பெருகிய நீரில் கெண்டைமீன் துள்ளித்திரிவது போலப் பரத்தையர் சேரியிற்களித்துத் திரிகின்றாய். நீர் வற்றியபோது மீன்கள் வருந்துவது போலச் செல்வம் குறைந்த போது நீயும் வருந்துவை எனக் குறிப்புக் காட்டினதாகக் கொள்க. ‘’நயமிலேம்’’ என்றது மகப்பெற்று வனப்பிழந்து முன்னிருந்த நிலைமை மாறிக்கண்ணுக்கு அருவருப்பாகத் தோன்றுகின்றோம் போலும் அதனாற் பரத்தையர் போலக் கண்ணைக் கவரும் பொலிவு எம்மிடத்தில்லை யென வெறுத்தீர் என்பது எமக்குத்தெரியும் எனக் குறிப்பிற் கூறியது எனக் கொள்க. இன்று வந்தது போதும்; இனி மேல் எம்மனைக்கு வறிதே வருவதும் வேண்டா என்று விலக்கினள். இளமுலையார் என்றது, மகப்பெறாதவர்; மகவிற்குப் பாலூட்டாதவர்; தங்கொங்கைகளையே புனைந்து இளமையாகத் தோற்றும்படி போற்றி வருவோர் எனப்பரத்தையரைப் பழித்தபடியாம், பரத்தையர் தோள்களை நயந்து ஆங்கே துயின்று வாழ்க ஈங்கு வருதலையொழி என்று புலந்தாள். தூயர் நறியர்நின் பெண்டிர், பேஎ யனையம்யாம் சேய்பயந்தனமே’’ எனவும், ‘’புதல்வனையீன்றவெம் மேனி, முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே’’ எனவும் வருந் தலைவி கூற்றுக்களையும் நோக்குக. புலவியில் தலைவி தன்னைப் பழிப்பது போலவும் பரத்தையரைப் புகழ்வது போலவும் கூறுவது இயல்பு எனக்காண்க.

(இ-பு.) கயல் இனம் - ஆறாம் வேற்றுமைத் தொகை. இலம் - தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. வாரல் - எதிர்மறை வியங்கோள். இளமை + முலையார் = இளமுலையார் பண்புத்தொகை. துயிலின் இன் உருபு கருவிப் பொருளில் வந்தது உருபு மயக்கம்; வாழ்க என்பதன் அகரம் தொகுத்தல்.