வாழ்க + இன் = வாழ்கின் என நின்றது. இன்குயில் என அடுத்துக் கொண்டு கூட்டுக. தலைவன் மகற்கொண்டுவருஞ் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது. 39. முட்ட முதுநீ ரடைகரை மேய்ந்தெழுந்து தொட்ட வரிவரால் பாயும் புனலூரன் கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டெம்மில் சுட்டி யலைய வரும். (சொ-ள்.) தொட்ட வரி வரால் - பதித்தனபோன்ற வரிகளையுடைய வரால் மீன்கள்; முதுநீர் அடைகரை முட்ட மேய்ந்து எழுந்து - பழமையான நீர் மோதுகின்ற கரைகள் முழுவதும் திரிந்து இரைகளையுண்டுபின் எழுந்து; பாயும் புனல் ஊரன் - நீர்க்குட்பாய்கின்ற நீர்வளம் பொருந்திய மருத நிலத்தலைவன்; கட்டு அலர் கண்ணி புதல்வனை - தொடுத்த மலர் மாலையை யணிந்த புதல்வனை; கொண்டு சுட்டி அலைய எம் இல் வரும் - ஏந்திக்கொண்டு அவன் நெற்றிச்சுட்டி யசையும்படி எம்மனைக்கு இப்போதுதான் வருகிறான் (இது மிகவும் வியப்பான செயல் எனத் தோழி தலைமகள் கேட்பக் கூறினள்;) (வி-ம்.) இதுகாறும் பரத்தையர் மனைக்கட் பயின்று தலைவியை நோக்காத தலைவன் மகன் பிறந்ததையறிந்து வந்து மகனைவாரியணைத்துக் கையிலேந்தித் தலைவியிருக்கும் மனைக்கு வருகிறான். மகன்பால் வைத்திருக்கும் அன்பை நோக்குங்கள் எனத் தலைவியும் மற்றுள்ள சுற்றத்தாரும் அறியும்படி தோழி கூறினள் எனக்கொள்க. மகன் பிறந்தான் எனக் கேட்டவுடன் தந்தை செய்தற்குரிய சிறப்புக்கள் மகனையெடுத்துப் பாராட்டுவது மரபு. அதனைத் தொல்காப்பியர் ‘’செய் பெருஞ்சிறப்பொடு சேர்தற் கண்ணும்’’ என்பர். ‘’சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்’’ என்ற பகுதியிற் சேர்த்துத் தோழி கூற்றாக்குக. வரால் மீன்கள் அடைகரை முழுவதும் தனக்குவேண்டிய சிறு மீன் தவளை முதலியவற்றைத் தின்று பின்னெழுந்து நீர்க்குட் பாய்வது போலத் தலைவனும் பரத்தையர் சேரிமுற்றும் திரிந்து
|