பரத்தையர் மனைகடோறும் சென்று தங்கி வருகிறான் என்ற குறிப்புத் தோன்ற ‘’தாரா இரியும் தகை வயலூரனை’’ என்றார். எம் தலைவர் சேரிக்குச் செல்லாதிருப்பினும் ‘’எம்மனைக்கு இன்று வந்தார்; எம்மனைக்கு நேற்று வந்தார் என்று தமக்குச் சிறப்புத்தோன்ற ஒவ்வொரு பரத்தையரும் கூறுவது இயற்கை ஆதலால் அவ்வாறு அவர்கள் பொய்யாகப் புனைந்து கூறுஞ் சொற்கள் வெளிப்பட்டு எம் தலைவியையும் தலைவனையும் ஒருவரோ டொருவர் கூடாமல் விலக்குகின்றன, நான் என்ன செய்வேன், இத்தகைய சொற்கள் பரத்தையர் சேரியிலிருந்து ஒவ்வொரு நாளும் புலப்படும்போது எம் தலைவி எவ்வாறு கூடுவள் என்ற கருத்துத் தோன்றும்படி ‘’வாரான் எனினும்.............. கூடுங்கொல்’’ என்றாள். தலைவன் பாணனை வாயிலாக விடுக்க வந்த பாணனைக்கண்டு தோழி இனிக் கூட்டத்திற்கு வழியேயில்லை; பரத்தையர் சேரிமுழுதும் தலைவன் புறத்தொழுக்கம் பரவியது; தலைவியறிந்தபின் எங்ஙனம் கூடுவாள் என்று மறுத்ததாகக் கொள்க. (இ-பு.) வாரான் - எதிர்மறைப் படர்க்கை ஆண்பால் வினைமுற்று. வரும் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று; ஆண்பாலுக்கு வந்தது ஈங்கு. பூங்கொடியன்னார் இதில் அன்னார் - குறிப்பு வினையாலணையும் பெயர். கலப்பு: பு விகுதி பெற்ற தொழிற்பெயர் நினைப்பு, மறப்பு என்பனபோல், அடும்: செய்யும் என் வாய்பாட்டு வினைமுற்று. ஒன்றன் பாலுக்கு வந்தது. மற்று - அசை. வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது. 41. பொய்கைநல் லூரன் றிறங்கிளப்ப வென்னுடையை அஃதன் றெனினு மறிந்தேம்யாஞ் - செய்தி நெறியி னினியசொன் னீர்வாய் மழலைச் சிறுவ னெமக்குடைமை யால். (சொ-ள்.) நீர்வாய் மழலை இனிய சொற் சிறுவன் - எச்சிலொழுகும் வாயுடன் திருந்தாத குதலையாகிய இனிய சொற்களைப்பேசும் எமது புதல்வன்; எமக்கு உடைமையால் - எமக்குத் துணையாக இருப்பதனால்; (வேறு வாழ்க்கைத்துணை
|